’அதிமுக ஒரு சிலரின் ஆணவம், பதவி வெறியில் சிக்கித் தவிக்கிறது’ - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய அதிமுக கட்சி ஒரு சிலரின் ஆணவம், பதவி வெறியால் சிக்கித் தவிக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
![’அதிமுக ஒரு சிலரின் ஆணவம், பதவி வெறியில் சிக்கித் தவிக்கிறது’ - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு Ttv Dinakaran accuses admk of being trapped by the arrogance and lust for office of a few ’அதிமுக ஒரு சிலரின் ஆணவம், பதவி வெறியில் சிக்கித் தவிக்கிறது’ - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/15/687cba56b77c71e802e0ee0b29a5c7301663225852031188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய அதிமுக கட்சி ஒரு சிலரின் ஆணவம், பதவி வெறியால் சிக்கித் தவிக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து வீர அஞ்சலி செலுத்தி இருக்கின்றோம். இன்னொரு கட்சி (அதிமுக) யில் நடக்கும் கூத்தை பற்றி பதில் சொல்ல வேண்டியதில்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அதிமுக விவகாரம் நீதிமன்றத்தில் போராடி கொண்டு இருக்கின்றது. தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம். ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் சிக்கி இருக்கின்றது. இதற்கு காலம் பதில் சொல்லும். எல்லாம் சரியாகிவிடும்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. திராவிட மாடல் என கூறிக் கொண்டு வரி சுமையை ஏற்றி மக்களை துன்பப்படுத்துகிறது. துன்பப்படுத்துவது தான் திராவிட மாடல் என்பதை திமுக நிருபித்து வருகின்றது. இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள். எந்த மொழியையும், எந்த மாநிலத்திலும் திணிக்கக் கூடாது. தமிழகத்தை பொறுத்த வரை மக்கள் விரும்பி ஏற்று கொள்ளாமல், திணித்தால் ஏற்று கொள்ள மாட்டார்கள். கொரொனா பாதிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்டியை குறைக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் மின் வெட்டால் பாதிக்கப்பட்டனர். இந்த திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வாட்டி வதைக்கும் வகையில் இருக்க கூடாது. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஊழலை ஒழிப்போம், முறைகேடுகளை அனுமதிக்க மட்னோம் என்ற வாக்குறுதிகளை மட்டும் செயல்படுத்தினால் போதாது. நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு மாதம் ஆயிரம் ருபாய், சொத்து வரி குறைப்பு என பல்வேறு வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. திமுகவினர் திருந்தவே மாட்டார்கள் என மக்கள் உணர்கின்றனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது மக்கள் கோபம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல, இந்த ஆட்சியும் மாறும். அண்ணா, பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனது குடும்பத்தை வளர்த்து இருக்கின்றது. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)