”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”தாங்கள் செல்லமாக வளர்த்த நாய் ஒரே நாளில் இறந்ததை தாங்க முடியாத சரத் குடும்பத்தார் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது”
திருமணத்திற்காக வெளியில் செல்வதற்காக தங்கள் நாயை தனியார் கால்நடை மருத்துவமனையில் விட்டுச் சென்றுவிட்டு திரும்பி வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
என்ன நடந்தது ?
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத். இவர் தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகின்றார். தன்னுடைய தங்கை சுருதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தான் 11 ஆண்டுகளாக குழந்தை போல பார்த்து, பார்த்து வளர்த்த ஆண் நாயை, கோவை மேட்டுப்பாளயம் சாலையில் உள்ள சஞ்சு கால்நடை நல மருத்துவமனையில் ஒரு நாள் வைத்து பராமரிக்க அதற்கான கட்டணமாக ஆயிரத்து 200 ரூபாயை செலுத்திவிட்டு சென்றுள்ளனர்.
அந்த நாயை மருத்துவர்கள் சுரேந்தர் மற்றும் கோபிகா ஆகியோர் பார்த்துக்கொள்வதாக சரத்தை அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் அன்று மாலையே மருத்துவமனையில் இருந்து சரத்திற்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு வந்து உள்ளது. அப்போது அங்கிருந்து பேசியவர்கள், உங்களுடைய நாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடனே வரும்படியும் கேட்டுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த குடும்பம்
இதனால் அதிர்ச்சி அடைந்த சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு அவருடைய செல்ல நாய் இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு ஆவேசமடைந்த சரத் குடும்பத்தார் அங்கு பணியில் இருந்தவர்களிடம் அழுகையும் ஆத்திரமுமாக சரமாரியான கேள்வி எழுப்பினர். ஆனால், அவர்களிடமிருந்து எந்த உரிய பதிலும் சரத் குடும்பத்தார்க்கு கிடைக்கவில்லை.
நாய்க்காக கதறிய குடும்பம்
தன் வீட்டில் ஒரு உறுப்பினர் போல் 11 ஆண்டுகளாக செல்லமாக வளர்த்த நாய் ஒரே நாளில் இறந்துப்போனதை கண்டு தாங்க முடியாத சரத்தின் குடும்பத்தார் மருத்துவமனையிலேயே கதறி அழுதனர். அவர்கள் அழுத வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
11ஆண்டுகளாக வளர்த்த நாய் ; பராமரிப்புக்காக விட்டுச் சென்ற இடத்தில் மரணம் | கதறிய குடும்பம்! pic.twitter.com/qr4OApqf9g
— Raja Shanmugasundaram (@SRajaJourno) November 25, 2024
காவல்நிலையத்தில் புகார்
தன்னுடைய நாய் இறந்ததை தாங்க முடியாத சரத், உரிய ஆதாரங்களோடு கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகார் பதிவு செய்யப்பட்டு, அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.