கோவையில், குழந்தையை கடத்த வந்ததாக கூறி வடமாநில இளைஞரை கட்டிப்போட்ட கிராம மக்கள்
குழந்தையை கடத்த வந்ததாக கூறி, வட மாநில வாலிபரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி போட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![கோவையில், குழந்தையை கடத்த வந்ததாக கூறி வடமாநில இளைஞரை கட்டிப்போட்ட கிராம மக்கள் The villagers tied up the youth of North Indian saying that he had come to abduct the child Coimbatore abduction kidnap tnn கோவையில், குழந்தையை கடத்த வந்ததாக கூறி வடமாநில இளைஞரை கட்டிப்போட்ட கிராம மக்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/01379d9f4c472ff2eac63f402facc9ee1716793234589188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் காரமடை அருகே குழந்தையை கடத்த வந்ததாக கூறி, வட மாநில வாலிபரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி போட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை அடுத்த திம்மம்பாளையம் புதூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வட மாநில வாலிபர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். அந்த இளைஞர் குழந்தைகளை நோட்டமிட்டதாக நினைத்து, அவரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் பிடித்து விசாரித்ததாக தெரிகிறது. அதற்கு அந்த இளைஞர் வட மாநில மொழியில் பேசியுள்ளார். இதனால் அவர் என்ன சொல்கிறார் என்பது எதுவும் புரியாததால், அந்த இளைஞர் குழந்தைகளை நோட்டமிட்டு கடத்திச் செல்லும் நபராக இருக்க கூடும் என சந்தேகித்த பொதுமக்கள், அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காரமடை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த காவல் துறையினர் காயமடைந்த வட மாநில இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காரமடை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை கடத்த வந்ததாக கூறி வட மாநில வாலிபர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த வந்ததாக வதந்தி பரவிய நிலையில், பல்வேறு பகுதிகளில் சந்தேகத்தின் பேரில் வட மாநிலத்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வந்தது குறைந்திருந்த நிலையில், மீண்டுமொரு தாக்குதல் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)