Crime : கோவையில் தப்பியோடிய சிறை கைதி ; தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்
பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று மீண்டும் செல்லும் போது, காவலரின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு, காவலரை தள்ளிவிட்டு தாலிக் ராஜா ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
கோவையில் பேருந்தில் ஆயுதப்படை காவலரின் பாதுகாப்பில் பயணித்த சிறை கைதி, காவலரை தள்ளிவிட்டு ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் தாலிக் ராஜா. 29 வயதான இவர் மீது, திருப்பூரில் நகை பறிப்பு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக தாலிக் ராஜா கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று கோவை சிறையில் இருந்து தாலிக் ராஜா உள்ளிட்ட 3 கைதிகளை திருப்பூரை சேர்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்பாக திருப்பூர் நீதிமன்றத்திற்கு பேருந்தில் அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக கைதிகளை திருப்பூர் ஆயுதப்படை காவலர் பேருந்தில் அழைத்து வந்தார்.
அப்போது ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று மீண்டும் செல்லும் போது, காவலரின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு, காவலரை தள்ளிவிட்டு தாலிக் ராஜா ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடினார். அப்போது காவலர் பொது மக்கள் உதவியுடன் கைதியை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆயுதப்படை தலமைக் காவலர் கோபிநாத் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர். மேலும் தப்பியோடிய சிறை கைதியை பிடிக்க ஆய்வாளர் வினோத் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்