பல்லடத்தில் படுகொலை சம்பவம்: தப்பியோடிய முக்கிய குற்றவாளி: சுட்டு பிடித்த போலீசார்
போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து, தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு முறை முட்டியிலும், ஒரு முறை தொடையிலும் துப்பாக்கியால் காவல் துறையினர் சுட்டு அவரை பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவர் தவிடு, புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழில் புரிந்து வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் செந்தில்குமார், இடம் சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது செந்தில் குமாரின் உறவினரான மோகன்ராஜ் என்பவருக்கும் வெங்கடேசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேசன் மனோஜ்குமாரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் சரியாக வேலைக்கு வராததால் செந்தில்குமார் வெங்கடேசனை வேலையை விட்டு நிறுத்தி உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செந்தில்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள அவரது தோட்டத்தில் அமர்ந்து வெங்கடேசன் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் மது அருந்தி உள்ளார். எதற்காக எங்களது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்துகிறீர்கள் என செந்தில் குமார் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்து கிளம்பி சென்ற வெங்கடேசன் மீண்டும் மோகன்ராஜின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த மோகன்ராஜை வெளியே அழைத்து வெங்கடேசன் பேசி கொண்டிருந்த போது, உடன் இருந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளை மோகன்ராஜை சரமாரியமாக வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்ட அவரது மகன் வெளியே வந்து பார்த்து விட்டு, உடனடியாக அவரது பாட்டி புஷ்பவதி மற்றும் சித்தப்பா செந்தில்குமார் ஆகியோரை அழைத்துள்ளார்.
அங்கு வந்த அவர்கள் மோகன்ராஜை காப்பாற்ற முயன்ற போது, அவர்களையும் கொடூரமாக வெட்டியுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மோகன்ராஜின் சின்னம்மா புஷ்பவதியையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த செந்தில்குமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மோகன்ராஜிடம் வெங்கடேசன் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும், செந்தில்குமாரிடம் இருந்து வேலையை விட்டு நின்ற நிலையில் பல முறை மோகன்ராஜ் பணம் கேட்டு தொலைபேசியில் அழைத்து கேட்டதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்த மோகன்ராஜை கொலை செய்ய திட்டமிட்ட வெங்கடேசன் தனது நண்பர்களை அங்கு அழைத்து வந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வெட்டி கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் மாதப்பூர் பா.ஜ.க கிளை தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி உறவினர்கள் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பாக உள்ள சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடல்களை வாங்க மறுத்தும் போராட்டம் நடத்தினர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, உறவினர்கள் உடல்களை பெற்றுக்கொண்டனர். இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக செல்லமுத்து என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் தப்பி செல்ல முயன்ற போது, கால் முறிவு ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை, பதுக்கி வைத்துள்ள இடத்தை காட்ட போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது வெங்கடேசன் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து, தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு முறை முட்டியிலும், ஒரு முறை தொடையிலும் துப்பாக்கியால் காவல் துறையினர் சுட்டு அவரை பிடித்தனர். பின்னர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் வெங்கடேசனை காவல் துறையினர் அனுமதித்தனர்.