’வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை நல்ல நிலையில் உள்ளது’- வனத்துறையினர் தகவல்
அடர் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானையை தனிக்குழு அமைத்து கண்காணித்து வருவதாகவும், யானை நல்ல நிலையில் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
![’வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை நல்ல நிலையில் உள்ளது’- வனத்துறையினர் தகவல் The forest department explained that the Magna elephant, which was released in the forest, is in good condition Coimbatore ’வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை நல்ல நிலையில் உள்ளது’- வனத்துறையினர் தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/25/0eb699beaeab859e2ce58e31422231a41677324730623188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அந்த மக்னா யானையை பிடிக்க கோரி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அந்த மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். கடந்த 5 ம் தேதியன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் வனத் துறையினர் கும்கி யானை உதவியுடன் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து கடந்த 6 ம் தேதியன்று அந்த யானை கோவை மாவட்டம் டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. பின்னர் நேற்று கிராம பகுதிக்குள் நுழைந்த அந்த யானை ஒரு இடத்தில் நிற்காமல், தொடர்ந்து நடந்து இடம் மாறிக் கொண்டு வந்தது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களை கடந்து, கிணத்துக்கடவு வழியாக மதுக்கரை பகுதியை நோக்கி யானை நடந்து வந்தது. மக்னா யானையை விரட்ட வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையடுத்து சுமார் 140 கி.மீ. தூரத்திற்கும் மேலாக நடந்து பல்வேறு கிராமங்களை கடந்து கோவை மாநகரப் பகுதியை மக்னா யானை அடைந்தது. குரும்பபாளையம் பகுதியில் எதிரே வந்த ஒருவரை யானை தும்பிக்கையில் தள்ளி விட்டு சென்றது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மக்னா யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், யானை பி.கே.புதூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. இதையடுத்து தெலுங்குபாளையம் பிரிவு, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது. பின்னர் நொய்யல் ஆற்றுக்கு அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் மக்னா யானை நின்றது.
இந்த யானையை பிடிக்க டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற வரவழைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மதியம் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகளை வனத்துறையினர் துவக்கினர். முட்புதர் பகுதியில் சுற்றிய மக்னா யானை வாழைத்தோட்டத்திற்குள் சென்றது. அப்போது மருத்துவர் பிரகாஷ் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். இதையடுத்து மயக்க நிலையில் வாழைத்தோட்டத்திற்குள் இருந்த மக்னா யானையை கும்கி யானை உதவியுடன் பிடித்து லாரியில் ஏற்றினர்.
மக்னா யானையை காரமடை அருகேயுள்ள முள்ளி வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறையினர் லாரி மூலம் கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள் வெள்ளியங்காடு பகுதியில் மக்னா யானையை ஏற்றிச் சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வனத்துறையினர், யானையை மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மக்னா யானைக்கு காலர் ஐ.டி. பொருத்தப்பட்டு மானம்பள்ளி வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர். அடர் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானையை தனிக்குழு அமைத்து கண்காணித்து வருவதாகவும், யானை நல்ல நிலையில் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)