Valparai Flood: வால்பாறை கூழாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளம்: சிக்கிக்கொண்ட புதுமணத் தம்பதி..! நடந்தது என்ன?
சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக இருப்பதால், நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கூழாங்கல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 சுற்றுலா பயணிகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திடீர் வெள்ளப்பெருக்கு:
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தேயிலை தொழில் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டிய வனப்பகுதிகள் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்களின் புகலிடமாக விளங்கி வருகிறது. அதேபோல ஏராளமான சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக இருப்பதால், நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் உள்ள கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சென்று குளித்து மகிழ்வது வழக்கம். தற்போது கோடை காலம் என்பதால், ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவில் வந்து கொண்டிருந்தது. இதனிடையே கடந்த இரண்டு தினங்களாக மதியத்திற்கு மேல் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சிக்கிய புதுமணத் தம்பதி:
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்த நிலையில், மதியத்திற்கு பின்பு வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும் சின்னக்கல்லார், சிங்கோனா, போன்ற வன பகுதிகளிலும் கன மழை பெய்தது. சின்னக்கல்லார் பகுதியில் 7 செ.மீ. மழை பதிவானது. அதிக மழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது.
அப்போது வால்பாறை பகுதியில் மழை இல்லாத நிலையில் கூழாங்கல் ஆற்றில் ஒரு சில சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென வெள்ளம் வந்த நிலையில் ஆற்றைக் கடந்து வர முடியாமல் தேனிலவுக்காக வந்த சென்னை சோழிங்கநகரை சேர்ந்த ராமச்சந்திரன், சுகன்யா புதுமணத் தம்பதிகள் மற்றும் பரசுராமன் ஆகிய 3 பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்துள்ளனர். இது குறித்து உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை கயிறு கட்டி 3 பேரையும் பத்திரமாக மீட்டெடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தொடரும் மழை:
வால்பாறை பகுதியில் கோடை மழை, ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்கிறது. தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என அழைக்கப்படுகின்ற சின்ன கல்லார் பகுதியில் கனமழை பெய்தால் வால்பாறை பகுதிக்கு வருகின்ற ஆறுகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும். இதை அறியாத சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற நிகழ்வுகளில் சிக்கித் தவிக்கின்றனர். ஆற்றில் சிக்கிய 3 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்