இறந்தும் 4 பேருக்கு பார்வை தந்த இளம் மருத்துவர் ; ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
பேருந்து ஏறச் செல்வதற்காக வீட்டில் லிப்டில் இருந்து இறங்கி இரு சக்கர வாகனத்தில் ஏறி உட்கார்ந்த போது, திடீரென உடல்நிலை சரியில்லை என கூறிய டாக்டர் பாலாஜி நாராயணன் மயங்கி கீழே விழுந்தார்.
![இறந்தும் 4 பேருக்கு பார்வை தந்த இளம் மருத்துவர் ; ஒரு நெகிழ்ச்சி சம்பவம்! The eyes of a young doctor who died due to ill health were donated to 4 people in Coimbatore TNN இறந்தும் 4 பேருக்கு பார்வை தந்த இளம் மருத்துவர் ; ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/02/114915807255312682e8b9c014032d931675341358333188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கட் ரமண வீதியில் வசித்து வருபவர் முரளி என்கிற பழனிக்குமார். 55 வயதான இவர் அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி பொருளாளராகவும் உள்ளார். இவருக்கு வசந்தி (46) மனைவியும் பாலாஜி நாராயணன் (25) மகனும், மைதிலி (23) என்ற மகளும் உள்ளனர். இதில் பாலாஜி நாராயணன் ரஷ்யாவில் 6 ஆண்டுகள் மருத்துவ படிப்பை படித்து விட்டு, இந்தியா வந்து 2020-ம் ஆண்டு டெல்லியில் FMGE தேர்வு எழுதி மருத்துவராக தேர்ச்சி பெற்றார். பின்னர் கொரோனா காலங்களில் திருப்பூர், ஈரோடு பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு டாக்டர் பாலாஜி நாராயண மருத்துவ சேவை புரிந்துள்ளார்.
அண்மையில் கோவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றினார். இந்நிலையில் டாக்டர் பாலாஜி நாராயணன் மருத்துவ மேற்படிப்பிற்காக கடந்த ஒன்றரை மாதங்களாக பொள்ளாச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவில் பாலாஜி நாராயணனுடன் மருத்துவ படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த திலீப் என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது 30-வது நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டாக்டர் பாலாஜி நாராயணன் கடந்த 26 ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து தனியார் பேருந்து மூலம் சென்னை பல்லாவரத்தில் நண்பன் திலீப் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள உறவினர் அசோக் நாராயணன் வீட்டில் பாலாஜி நாராயணன் தங்கி இருந்துள்ளார். 28-ம் தேதியன்று இரவு பொள்ளாச்சி திரும்புவதற்காக தனியார் பேருந்தில் டிக்கெட் புக் செய்திருந்தார். 28 ம் தேதி இரவு பேருந்து ஏறச் செல்வதற்காக வீட்டில் லிப்டில் இருந்து இறங்கி இரு சக்கர வாகனத்தில் ஏறி உட்கார்ந்த போது, திடீரென உடல்நிலை சரியில்லை என கூறிய டாக்டர் பாலாஜி நாராயணன் மயங்கி கீழே விழுந்தார். அதன் பின்னர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை கொண்டு சென்று உடலை பரிசோதித்துப் பார்த்த போது, பாலாஜி நாராயணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைக் கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின்னர் டாக்டர் பாலாஜி நாராயணனின் உடல் பொள்ளாச்சிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஏற்கனவே பாலாஜி நாராயணன் தனது இரண்டு கண்களையும் தானம் செய்திருந்ததால் சென்னையில் உள்ள சங்கர் நேத்ராலயா மருத்துவமனைக்கு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டது. தற்போது பாலாஜி நாராயணனின் கருவிழிகள் இரண்டு பேருக்கும், வெள்ளை கண் இரண்டு என நான்கு பேருக்கு பொருத்தப்பட்டு, நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)