(Source: ECI/ABP News/ABP Majha)
Ooty kallati Accident : உதகை கல்லட்டி மலைப்பாதையில் தீப்பற்றி எரிந்த கார் ; நல்வாய்ப்பாக தப்பிய சுற்றுலா பயணிகள்..
நான்காவது கொண்டை ஊசி வளைவில் வந்த போது, காரின் முன்பக்கத்தில் புகை வருவதை கண்டு ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தினர். அப்போது காரின் முன் பகுதியில் திடீரென தீ பிடித்து எரியத் துவங்கியது.
நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப் பாதையில் பெங்களூரிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்த கார் திடீரென தீப்பற்றி ஏரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வழக்கம். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் உதகைக்கு வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் சரவணன், வினித், சுரேஷ், சரண்பாபு, பிரசந்த் ஆகிய 5 பேர் உதகையை சுற்றி பார்க்க வாடகை காரில் உதகைக்கு வந்துள்ளனர். மசினகுடி வழியாக கல்லட்டி மலைப் பாதையில் உதகைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
நான்காவது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, காரின் முன்பக்கத்தில் புகை வருவதை கண்டு ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தினர். அப்போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. பின்னர் தீ மளமளவென வேகமாக கார் முழுவதும் பரவியது. உடனடியாக காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தி வெளியில் இறங்கி ஓடியதால், அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனிடையே தீ கொளுந்து விட்டு எரிந்ததில் கார் முற்றிலுமாக சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதகை தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இந்த தீ விபத்து குறித்து புதுமந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி தலைகுந்தாவிலிருந்து மசினகுடி வரை கல்லட்டி மலைச்சரிவில், கொண்டை ஊசி வளைவுகளுடன் வளைந்து நெளிந்து செல்கிறது கல்லட்டி மலைப்பாதை. ஆபத்தான சரிவில் 36 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சாலை, தமிழ்நாட்டில் அதிகம் வாகன விபத்துகள் ஏற்படும் சாலைகளில் ஒன்றாக இருக்கிறது. விபத்துகள் அதிகரிப்பு காரணமாக தலைகுந்தாவில் இருந்து மசினகுடி செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அச்சாலையில் வெளியூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
உள்ளூர் வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மசினகுடியில் வழியாக தலைகுந்தா செல்ல வெளியூர் வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்