Watch Video: வால்பாறையில் காரை தந்தத்தால் குத்தி வீசிய யானை - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்..!
எதிர்பாராத விதமாக திடீரென ஓடி வந்த சுள்ளி கொம்பன் யானை, காரின் இடது புறம் கண்ணாடிகளை உடைத்து தனது கொம்பால் காரை தூக்கி வீச முயற்சி செய்தது.
கோவை மாவட்டம் வால்பாறை சாலையில் சென்ற காரை சுள்ளி கொம்பன் காட்டு யானை தந்தத்தால் குத்தி காரை தூக்கி வீச முயன்ற நிலையில், காரில் இருந்து நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
காட்டு யானைகள்:
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் உலா வருகின்றன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட நவமலை, சின்னார்பதி ஆகிய பழங்குடியின மக்களின் குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கேரளாவில் இருந்து வந்த சுள்ளி கொம்பன் என்ற ஒற்றைக் காட்டு யானை நடமாடி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அருகில் உள்ள தென்னந்தோப்பு பகுதிகளில் சென்று அந்த யானை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் யானை நடமாட்டத்தை சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.
வால்பாறை சாலையில் சென்ற காரை தந்தத்தால் குத்தி தூக்கி வீச முயன்ற சுள்ளி கொம்பன் யானையின் பரபரப்பு காட்சிகள்...@abpnadu pic.twitter.com/ge6dfkqOgG
— Prasanth V (@PrasanthV_93) February 22, 2023">
கேரளா மாநிலம் கொச்சின் பகுதியைச் சேர்ந்த அஜிஸ் டேனியல் என்பவர் வால்பாறையில் மொசைக் பாலிஷ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று சொந்த ஊருக்கு தனது நண்பர்களுடன் வால்பாறையில் இருந்து ஹோண்டா காரில் வந்துள்ளார். அப்போது சித்தர் பாலம் அருகே சாலையில் இருந்த சுள்ளி கொம்பன் யானை நின்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்து டேனியல் காரை நிறுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஓடி வந்த சுள்ளி கொம்பன் யானை, காரின் இடது புறம் கண்ணாடிகளை உடைத்து தனது கொம்பால் காரை தூக்கி வீச முயற்சி செய்தது.
இதில் வால்பாறையில் இருந்து தோனி முடியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்பத்துடன் சென்ற காரில் உரசியது. இதில் இரண்டு கார்களும் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் ஹோண்டா காரில் வந்த கேரளாவைச் சேர்ந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவி அருவி பகுதியில் இரண்டு கார்களை சுள்ளி கொம்பன் யானை தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்டு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் வாகனத்தின் மூலம் கண்காணித்து வருகின்றனர். சுள்ளி கொம்பன் யானை காரை தாக்கிய காட்சிகள் டேனியல் காரில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகிய அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்