பாஜக தலைவர்கள் படங்களுடன் பேனர்; அகற்றிய மாணவர்கள் - கோவையில் பரபரப்பு
பாஜக கட்சியின் சின்னமான தாமரை, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் புகைப்படங்கள் அடங்கிய பிளேக்ஸ் பேனரை பாஜகவினர் பள்ளி வளாகத்திற்குள் வைக்கப்பட்டது.
கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2.50 இலட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வானதி சீனிவாசன் வழங்கினார். இதற்கு முன்னதாக பாஜக கட்சியின் சின்னமான தாமரை, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் புகைப்படங்கள் அடங்கிய பிளேக்ஸ் பேனரை பாஜகவினர் பள்ளி வளாகத்திற்குள் வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து அப்பள்ளி தலைமையாசிரியரின் அறிவுறுத்தலை அடுத்து, பள்ளி மாணவர்கள் அந்த பேனரை அகற்றி மறைவான இடத்தில் வைத்தனர். பின்னர் பாஜகவினர் அந்த பேனரை பள்ளி வளாகத்திற்கு முன்பாக கொண்டு சென்று வைத்தனர். பள்ளி வளாகம் முன்பு அனுமதியின்றி பாஜக தொண்டர்கள் வானதி சீனிவாசனை பட்டாசு வெடித்து வரவேற்றனர். அப்போது வெடிக்காத ஒரு பட்டாசு தாமதமாக வானதி சீனிவாசன் காலுக்கு கீழ் வெடித்தது.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், “கோவை கணபதி பகுதி அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளுக்காக 70 வருட பழமையான கோவில் இடிக்கப்பட்டு அதற்காக மாற்று நிலம் காவலர் குடியிருப்பு அருகே 3 சென்ட் அளவிற்கு வழங்கப்பட்டும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாகியும் இடிக்கப்பட்ட கோவிலில் இருந்த விக்கிரகங்கள் நிறுவப்படாமல் உள்ளது. எனவே, இந்து அறநிலையத்துறை உடனடியாக இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்று மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நடவடிக்கை எடுக்கும் போது மாற்று இடம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியின் நடவடிக்கையை பாரபட்சமின்றி செய்ய வேண்டும். கோவில்களை அப்புறப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை திமுக கட்சி மன்றங்களை அகற்றுவதில் அதிகாரிகள் காட்டுவதில்லை.
கோவை மாநகராட்சியை பொருத்தவரை சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கோவை மாநகராட்சியை புறக்கணிக்காமல் நல்ல சாலையை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நான் மீண்டும் வைக்கிறேன். சென்னை மாநகராட்சி போன்று கோவையிலும் மேம்பாலங்களின் தூண்களில் அழகிய ஓவியங்கள் வரைய பட்டு வருகிறது. இதில் உண்மையான தகவல்களை மறைத்து ஓவியங்கள் வரையப்பட்டதாக கூறி அனைத்து தூண்களிலும் உள்ள ஓவியங்களை ஒரு தரப்பினர் அழிப்பது சேதப்படுத்துவது சரியான நடவடிக்கையாகாது. அதிகாரிகளிடம் அதனை முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற ஓவியங்கள் வரையப்படும் போது உண்மை தன்மையை ஆராய வேண்டும்.
கோவையில் தொடர் கொலைகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. திமுகவினரின் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது எதனை காட்டுகிறது என்றால் திமுகவினர் மீது அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதனை இது காட்டுகிறது. எனவே முதலமைச்சர் அவரது கட்சியினருக்கு அறிவுரை வழங்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தாமல், தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிறுவனம் முடங்கிப் போகும் அளவிற்கு ஒரு தொகுதியில் தேர்தல் உள்ளது. இடைத்தேர்தலில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் முறையிட்டு வருகிறோம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.