'ஆஃப்கனில் உள்ள இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது' : சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு..!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் எவ்வளவு இந்தியர்கள் இருக்கின்றனர் என்ற தகவல் மத்திய அரசிடம் இல்லை. காபூலில் இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது - சீத்தாராம் யெச்சூரி
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு கூட்டம் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோவைக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கொரோனா தடுப்பூசி குறித்து தெளிவான பதிலை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. தமிழக முதல்வர் செங்கல்பட்டு, குன்னூர் பகுதிகளில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்டுள்ளார். கொரோனா மூன்றாவது அலை வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பெட்ரோலிய பொருட்களுக்கு அதிகப்படியான வரியை மத்திய பாஜக அரசு விதிக்கின்றது. பெட்ரோலிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியால் 2020-21 ஆண்டில் 3.71 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.இதுவரை 15.6 லட்சம் கோடி ரூபாயினை வரி விதிப்புகள் மூலம் மத்திய அரசு பெற்றுள்ளது. சிபிஎம் பெட்ரோலிய பொருட்களின் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. இதன் மூலமே அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியும். இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், நீதித்துறையை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து துறையினரும் பெகாசஸ் செயலி மூலம் வேவு பார்க்கப்பட்டுள்ளனர். வரும் 20-ஆம் தேதி 20 எதிர்கட்சிகள் இணையம் மூலம் பெகாசஸ் விவகாரம் குறித்து ஆலோசணை நடத்த இருக்கின்றோம். கோவிட் விதிமுறைக்கு உட்பட்டு பெகாசஸ் விவகாரத்தில் போராட்டம் நடத்த இருக்கின்றோம்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் எவ்வளவு இந்தியர்கள் இருக்கின்றனர் என்ற தகவல் மத்திய அரசிடம் இல்லை. காபூலில் இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது. ஆகஸ்ட் 14-ஆம் தேதியினை பிரிவினை பயங்கரவாத நாள் என பா.ஜ.க அறிவித்து இருக்கின்றது. 1938-ஆம் ஆண்டிலேயே சாவர்க்கர் இரண்டு தனி நாடாக வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றார். 1940-ஆம் ஆண்டுக்கு பின்பு தான் முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையினை முன் வைத்தார். முதலில் பிரிவினைவாத கருத்தினை துவங்கியது சாவர்க்கர்தான்.
126 இடங்களில் 26 மாநிலங்களில் பா.ஜ.க யாத்திரை நடத்துகின்றது. இது கோவிட் பரவலுக்கான காரணமாக இருக்கும். இந்த நிகழ்வுகள் 3-வது அலையில் வேகமாக கொரொனா பரவ வழி வகுக்கும். மத்திய அரசின் ஸ்கிராப் பாலிஸி குஜராத்தில் உள்ள சில முதலாளிகளுக்கு மட்டுமே பயன்தரும்” என அவர் தெரிவித்தார். பேட்டியின்போது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.