பேஸ்ட் பார்ம் முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்!
தங்கத்தை பேஸ்ட் பார்ம் என்ற முறையில் பொடியாக்கி கெமிக்கல் சேர்த்து எடுத்து வரும் போது, விமான நிலையத்தில் உள்ள பரிசோதனை கருவிகளால் தங்கத்தை கண்டுபிடிக்க முடியாது.
சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் பேஸ்ட் பார்ம் என்ற நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 6 பேரிடம் இருந்து 7 கிலோ 907 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளி நாடுகளில் இருந்து விமானம் மூலம் பல்வேறு முறைகளில் தங்கம் உள்ளிட்டவை கடத்தி வரப்படுகின்றன. இதனைத் தடுக்க விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து புதிய புதிய நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், விமான நிலையங்களில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது மண்ணாங்கட்டி ஆறுமுகம், பஜரூல் ரஹ்மான் ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், தீன் இப்ராஹிம்ஷா ஆகிய தமிழகத்தை சேர்ந்த 6 பேரிடம் இருந்து 7 கிலோ 908 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி ஆடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. 6 பேரிடமும் இருந்து தங்கத்தை பறிமுதல் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொடியாக இருந்த தங்கத்தை கட்டியாக சேர்த்த போது 6117.8 கிராம் 24 கேரட் தங்கம் வந்துள்ளது. கைப்பற்றபட்ட தங்கத்தின் மதிப்பு 2 கோடியே 99 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சமீப காலமாக தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே கடத்தி வருபவர்களை பிடிக்க முடியும் என்பதுடன், வழக்கமான சோதனைகளில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை பிடிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கத்தை பேஸ்ட் பார்ம் என்ற முறையில் பொடியாக்கி கெமிக்கல் சேர்த்து எடுத்து வரும் போது, விமான நிலையத்தில் உள்ள பரிசோதனை கருவிகளால் தங்கத்தை கண்டுபிடிக்க முடியாது. இதனை சாதகமாக பயன்படுத்தி, இந்த முறையை பின்பற்றி தங்கம் கடத்தல்கள் அதிகரித்து வருகிறது. பிடிபட்ட 6 பேரும் வெவ்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் இவர்களை ஓரே நபர் அனுப்பினாரா அல்லது வேறு வேறு நபர்கள் அனுப்பி இருக்கின்றனரா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக சினிமாவில் தான் இது போன்ற கடத்தல் சம்பவங்களை பார்த்திருப்போம். நிஜத்திலும் அவை நடக்கிறது.