Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
எட்டப்ப மகாராஜா வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தாரா? என்பதற்கு எட்டப்ப சமஸ்தான 42வது மகாராஜா சந்திர சைதன்யா விளக்கம் அளித்துள்ளார்.

Chandra Chaitanya: தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமஸ்தானங்களில் ஒன்றாக இருப்பது எட்டயபுரம். எட்டயபுர சமஸ்தானத்தின் 42வது மகாராஜா ஏபிபி குழுமம் நடத்திய ABP Southern Rising Summit நிகழ்ச்சியில் எட்டயபுரத்தின் 42வது மகாராஜா சந்திர சைதன்யா பங்கேற்றார்.
பிரிட்டிஷாரை முதன்முதலில் எதிர்த்து சமஸ்தானம்:
அதில் அவர் பேசியதாவது, பிரிட்டிஷ் அரசின் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து கப்பம் கட்ட முடியாது என்று முதன் முதலில் கூறியது எட்டயபுரம் சமஸ்தானம் தான். கப்பம் கட்ட முடியாது என்று கூறி கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போராடியதால், எட்டயபுரத்தை விட்டு வெளியேறி, 2 தலைமுறைகள் அங்கு வசிக்க முடியாமல் போனது.
எட்டப்பன் காட்டிக்கொடுத்தாரா?
உண்மையான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு சரியாக கொண்டு செல்வதற்கான பணியை மேற்கொண்டு வருகிறோம். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டதாலேயே, எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு தற்போது வரை பரவியுள்ளது.
திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட எட்டயபுரம் அரசரின் தவறான வரலாறு பள்ளி பாடப்புத்தகத்திலும் பாடமாக இம்பெற்றுவிட்டதால், அதை நீக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அது குறித்து பரிசீலிப்பதாக அமைச்சரும் தெரிவித்துள்ளோம்.
தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதில் முத்தமிழுக்கும், அதாவது இயல், இசை, நாடக வடிவில் பெரும் பங்களிப்பை எட்டயபுரம் சமஸ்தானம் கொடுத்துள்ளது.தற்போதும் அதில் ஈடுபட்டுள்ளோருக்கு அதற்கான தனது பங்களிப்பை வழங்கி வருகிறோம். எட்டயபுர சமஸ்தானத்திற்குத்தான் அழகு முத்துக்கோன் தளபதியாக இருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர். இவர் ஆங்கிலேயருக்கு எதிராக தொடர்நது போராடி வந்தபோது, அவரை எட்டயபுர மகாராஜாவான எட்டப்பன் காட்டிக்கொடுத்ததாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
நடிகர் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வரலாற்று வெற்றிப்படம் ஆகும். இந்த படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் எட்டப்பன் என்றாலே துரோகி என்று ஒரு பிம்பம் உள்ளது. இந்த தகவலை எட்டயபுர சமஸ்தானத்தினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். மேலும், இந்த தகவலுக்கு எதிராக தொடர்ந்து தங்கள் தரப்பு நியாயத்தை எட்டயபுர சமஸ்தானத்தினர் தொடரந்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
எட்டப்பன் மீதான களங்கத்தை போற்ற வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் எட்டப்ப சமஸ்தானத்தினர் அதற்கு எதிராக போராட்டங்களையும் அவ்வப்போது முன்னெடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து தமிழ் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் ஆய்வுக்கட்டுரைகளும், புத்தகங்களும் ஆய்வு செய்து புத்தகங்களும் எழுதியுள்ளனர்.






















