'திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் தான் நடைபெறுகிறது' - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
"திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் தான் நடைபெறுகிறது. இதை அண்ணாமலையோ, நாங்கள் சொல்லியோ தெரிய வேண்டியது இல்லை."
கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக அலுவலகத்தின் வாயிலில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்தார். பின்னர் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலையும் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “சட்ட மேதை அம்பேத்கர் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. எடப்பாடியார் உத்தரவுக்கு இணங்க இன்று 5 இடங்களில் நீர் மோர் பந்தல் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை. அத்திக்கிடவு அவிநாசி திட்டம், பாலங்கள், சாலைகள் போன்ற திட்டங்கள் அனைத்தும் மிக மெதுவாக நடைபெறுகிறது. புதியதாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக சொத்து பட்டியல் வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு, “திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் தான் நடைபெறுகிறது. இதை அண்ணாமலையோ, நாங்கள் சொல்லியோ தெரிய வேண்டியது இல்லை. கோவையில் ஒரு லோடு மண் எடுப்பதற்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை லஞ்சமாக வாங்குகின்றனர். மாநகராட்சி, தாலுகா அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் இருக்கிறது. திமுக எல்லா இடங்களிலும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது” எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் எல்லா இடங்களிலும் மருந்தடிக்கப்பட்டது. கொரொனா கட்டுப்படுத்துவது குறித்து கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது அலுவல் ரீதியாக கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. தமிழக சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்காக பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருகிறார்கள். அவை எல்லாம் வெளியில் தெரிவதில்லை. திமுகவை ஊடகங்கள் தான் தூக்கிப் பிடிக்கின்றன. ஊடகங்கள் கைவிட்டு விட்டால் திமுக விழுந்து விடும்.
ஐபிஎல் போட்டிகளை பொறுத்த வரை கிரிக்கெட் போர்டில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 300, 400 டிக்கெட் கொடுக்கப்பட்டிருப்பதாக கேள்வி பட்டோம். இந்த நேரத்தில் அது தொடர்பான கேள்வியை சட்டமன்றத்தில் கேட்டால் சரியாக இருக்கும் என்பதால் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுகாகவே கேட்கப்பட்டது. அதற்கு விளையாட்டு துறையில் இருந்து பதில் சொல்லிவிட்டார்கள். அதற்கு பின்பு சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைய பேருக்கு மேட்ச் பார்க்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அவர்கள் போய் மேட்ச் பார்த்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்