கோவையில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்ற ருவாண்டா நாட்டு இளைஞர் கைது
விசா முடிந்த நிலையில் சொந்த நாட்டுக்கு திரும்பாமல் சட்ட விரோதமாக இங்கேயே தங்கி இருப்பதும், மாணவரை போல கல்லூரி முன்பாக நின்று கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது
கோவை சரவணம்பட்டி அருகே கஞ்சா விற்ற ருவாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர், இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகரப் பகுதிகளில் சமீப காலமாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதும் அதிகரித்து வருகிறது. அதேபோல புதிய புதிய வகையிலான போதைப் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகி வருவதும் நடந்து வருகிறது. குறிப்பாக கல்லூரிகள் நிறைந்த பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை மாணவர்களிடம் விற்பனை செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - மனைவியின் கர்ப்பத்தில் சந்தேகம் - கைவிட்ட கணவருக்கு எதிராக குடும்பத்துடன் மனைவி சாலை மறியல்
இந்நிலையில் கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சரவணம்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று மாலை கீரணத்தம் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த இஸ்மி ஸ்டெப் வின்ஸ் (32) என்பதும், கீரணத்தம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
கல்லூரி படிப்புக்காக கடந்த 2017ஆம் ஆண்டு கோவை வந்த அவர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்ததும், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதியுடன் விசா முடிந்த நிலையில் சொந்த நாட்டுக்கு திரும்பாமல் சட்ட விரோதமாக இங்கேயே தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும் கல்லூரி மாணவரை போல கல்லூரி முன்பாக நின்று கொண்டு மாணவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இஸ்மி ஸ்டெப் வின்சை சரவணம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இஸ்மி ஸ்டெப் வின்ஸ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்