
Crime: கோவையில் என்கவுன்டர்க்கு பயந்து தலைமறைவாக இருந்த ரவுடி நீதிமன்றத்தில் சரண்
காவல் துறையினர் சுட்டு என்கவுண்டர் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் சண்முகம் தெரிவித்தார்.

கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி என்கவுண்டர் பயத்தில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மீது சரவணம்பட்டி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கஞ்சா கடத்தல் உட்பட 15 வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்குகள் தொடர்பாக காவல் துறையினர் சண்முகத்தை தேடி வந்தனர். இதையறிந்த சண்முகம் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனிடையே அவரது குடும்ப உறுப்பினர்களை கைது செய்து விடுவதாகவும், சண்முகத்தை என்கவுன்டர் செய்ய உள்ளதாகவும் காவல் துறையினர் மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இன்று ரவுடி சண்முகம் தனது வழக்கறிஞர்களுடன் கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
காவல் துறையினர் சுட்டு என்கவுண்டர் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் குடும்பத்தினருக்காக நீதிமன்றத்தில் சரண் அடைவதாக சண்முகம் தெரிவித்தார். தன் மீது15 வழக்குகள் இருப்பதால் காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருவதாகவும், எனவே தானாக முன் வந்து சரண் அடைவதாகவும் அவர் கூறினார். சிறையில் இருந்து வெளியில் வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது எனவும், தற்போது திருந்தி வாழ்ந்து வரும் தன்னை காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருவதால் வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவதாகவும் அவர் தெரிவித்தார். தனது சகோதரர் மீதும் 5 வழக்குகள் இருப்பதாகவும், சமீபத்தில் அவரை பிடித்த காவல் துறையினர் கை,கால்களை உடைத்து விட்டதாகவும் கூறிய அவர், தனக்கு எதுவும் ஆகாமல் இருக்கவே மக்கள் முன்னிலையில் நீதிமன்றத்தில் சரண் அடைவதாகவும், சிறையில் இருந்தே மற்றதை பார்த்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

