IND vs AUS: பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி; டியர் டீம் இந்தியா! உங்களுக்கு இப்போது என்ன தேவை?
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், இந்திய அணியை தட்டிக்கொடுத்து வெற்றிப் பாதைக்குத் திரும்ப வைக்க வேண்டியதும் ரசிகர்களின் கடமை.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாப தோல்வியை அடைந்துள்ளது. இந்த போட்டியில் நன்றாக அலசிப் பார்த்தால் அவ்வப்போது வெற்றி வாய்ப்பு இந்திய அணியின் பக்கம் வந்தது. பொறுப்பற்ற பேட்டிங் மட்டுமின்றி சொதப்பலான ஃபீல்டிங்காலும் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
ரசிகர்கள் ஆதங்கம்:
360 ரன்கள் என்ற இமாலய இலக்கை டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் எட்ட முடியாது என்பது அசாத்தியமானது. ஆனால், டிரா செய்ய வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் ரோகித், விராட், கே.எல்.ராகுல், ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் பொாறுப்பற்ற முறையில் ஆடி அவுட்டானதால் ஆட்டம் பறிபோகிவிட்டது.
இதனால், இந்திய அணியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்த வெற்றி பறிபோனது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பும் மங்கியதும் காரணம் ஆகும். ரசிகர்களின் கோபத்திலும், ஆதங்கத்திலும் சில அர்த்தங்களும் உள்ளது.
எவ்வாறு சரி செய்ய வேண்டும்?
ஆனால், இந்த நேரத்தில் இந்திய அணிக்கு தேவை எப்படி மீண்டு வருவது என்பதே ஆகும். தோல்வி அடையும்போது ரசிகர்களால் விமர்சிக்கப்படுவது என்பது விளையாட்டு வீரர்களுக்கு சகஜமான ஒன்று என்றாலும், போராடாமல் தோல்வி அடைவது என்பதும், வெற்றி பெற வேண்டிய சூழலில் தோல்வி அடைவது என்பதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
2024ம் ஆண்டை தோல்வியுடன் இந்திய அணி முடித்திருந்தாலும், 2025ம் ஆண்டை வெற்றியுடன் தாெடங்குவதற்காக ஆயத்தம் ஆக வேண்டும். அடைந்த தோல்விக்கு பழி வாங்க வேண்டும் என்று எண்ணாமல், தங்கள் தரப்பில் உள்ள தவறுகளை எவ்வாறு சரி செய்ய வேண்டும்? எந்த இடத்தில் ஆட்டத்தை கைவிடுகிறோம்? என்பதை சிந்திக்க வேண்டும்.
ரோகித் மற்றும் விராட்
குறிப்பாக, ரோகித் மற்றும் விராட் கோலி நிச்சயம் தங்களது ஃபார்முக்கு வர வேண்டியது அவசியம் ஆகும். அது அவர்களின் கிரிக்கெட் எதிர்காலம் மட்டுமின்றி இந்திய அணியின் எதிர்காலத்திற்காகவும் ஆகும். ஏனென்றால் இந்திய அணியின் இவர்கள் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும்போது ஏற்படும் தாக்கம் என்பது அபரிமிதமானது. இவர்கள் இருவரும் களத்தில் நங்கூரமிட்டால் ஒட்டுமொத்த அழுத்தமும் எதிரணி பக்கம் திரும்பி விடும் என்பதி்ல் எந்த சந்தேகமும் இல்லை. அதை இவர்கள் இருவரும் பல முறை செய்துள்ளனர். எப்படி கம்பேக் தர வேண்டும் என்று அவர்கள் யோசிப்பது அவசியம் ஆகும். கவர் டிரைவின் ராஜாவான விராட் கோலி அதே ஷாட்டில் இந்த தொடரில் அதிக முறை அவுட்டாகியுள்ளார். அதை அவர் சரி செய்ய வேண்டும்.
கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட்:
கே.எல்.ராகுல் இந்திய அணியில் நீண்ட காலமாக ஆடி வந்தாலும் அவருக்கு என்று ஒரு முறையான பேட்டிங் ஆர்டர் வழங்கப்படாமலே உள்ளது. அவரது பேட்டிங் ஆர்டரை சரி செய்யாமல் அவரிடம் இருந்து நல்ல பலனை எதிர்பார்ப்பதும் தவறு ஆகும். தொடக்க வீரர் முதல் 7வது வீரர் வரை அவர் ஆடியுள்ளார். எதிர்காலத்தில் அணியின் முக்கிய தூணாக விளங்கும் அவருக்கு நிரந்தர பேட்டிங்கை ஏற்பாடு செய்ய வேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை பெற்றவர் ரிஷப்பண்ட். அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அவர் அதை செய்து காட்டியுள்ளார். இந்த தொடர் முழுவதும் அவர் தடுமாறி வருகிறார். அவர் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டியது மிக மிக அவசியம் ஆகும். அணியின் சுழல் பிரிவை வழிநடத்தும் ஜடேஜா இந்த தொடரில் பெரியளவு தாக்கத்தை பந்துவீச்சில் செலுத்தவில்லை. அதற்கு மைதானமும் ஒரு காரணம் ஆகும். ஆனாலும், அவர் அதைக் கடந்து சாதிக்க வேண்டியதே அவரின் அனுபவத்திற்கு சவால் ஆகும்.
பந்துவீச்சு
இந்திய அணியின் பந்துவீச்சு முழுக்க முழுக்க பும்ராவையே நம்பியுள்ளது. இந்த தொடர் முழுக்க பும்ரா மட்டுமே இந்திய அணியை தாங்கிப்பிடித்து வருகிறார். அவரும் இல்லாவிட்டால் அணியின் நிலைமை மிகவும் மோசமானதாக மாறிவிடும். முகமது சிராஜ் எதிரணிக்கு ரன்களை வாரி வழங்குவதில் ரன் மெஷினாக திகழ்கிறார். அவர் சிறப்பான பந்துவீச்சை வழங்காவிட்டால் இந்திய அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகிவிடும். மேலும் எதிரணி வீரர்களிடம் வம்பிழுப்பதை விடுத்து, விக்கெட்டை எப்படி வீழ்த்த வேண்டும் என்பதில் அதிக கவனம் அவர் செலுத்த வேண்டும். ஆகாஷ் தீப் ரன்களை வீழ்த்தாவிட்டாலும் விக்கெட் வீழ்த்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த தொடரில் பெரும்பாலும் ஆட்டத்தின் போக்கை முடிவு செய்ததே டெய்லண்டர்களே ஆவார்கள். இந்தியாவின் டெய்லண்டர்களை காட்டிலும் ஆஸ்திரேலிய டெயிலண்டர்கள் சிறப்பாக ஆடினர். இந்திய டெயிலண்டர்களிடமும் அதுபோன்ற ஆட்டம் வெளிப்பட்டாக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இளம் வீரர் நிதிஷ் ரெட்டியையும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியதும் அணி நிர்வாகத்திற்கு முக்கியம்.
கவுதம் கம்பீர்:
இவர்கள் அனைவரையும் காட்டிலும் இவையனைத்திற்கும் பொறுப்பானவர் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணியின் தோல்வி என்பது ஒவ்வொரு தொடரிலும் அதிகரித்துள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடர், இலங்கை டி20 தொடர் தவிர எந்த தொடரையும் இந்தியா வெல்லவில்லை. 2024ம் ஆண்டு இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் கூட வெல்லவில்லை.
மிக மிக மோசமான பயிற்சியாளர் என்ற பெயர் பெற்றுள்ள கம்பீர், டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவாறு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டியதும் அவசியம் ஆகும். சொந்த மண்ணில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தபோது அவர் அவரை சரிசெய்திருக்க வேண்டும். குறிப்பாக, டெஸ்ட் போட்டிக்கான அடையாளமான மன வலிமையையும், பொறுமையும் இந்திய அணி இழந்துவிட்டதோ என்பதும் பெரிய கேள்விக்குறியாக எழுந்து நிற்கிறது. அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு பயிற்சியாளர் கம்பீரடமே உள்ளது.
ஒரு அணியாக இந்திய அணி பயிற்சியாளர் முதல் பந்துவீச்சாளர் வரை தவறுகைள இழைத்துவிட்டது. அனைத்து தவறுகளையும் சரி செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை மனதில் வைத்து ஆடாமல், எதிர்கால இந்திய டெஸ்ட் அணியை மனதில் வைத்து ஆடி மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்ப மன உறுதியுடன் புத்தாண்டை தொடங்க வேண்டும்.