Watch Video : கோவை அருகே சிறுத்தை நடமாட்டம், வெளியான வீடியோ ; அச்சத்தில் மக்கள்..
குடியிருப்புக்குள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சுகுணாபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை வனச் சரகத்திற்கு உட்பட்ட மதுக்கரை, சுகுணாபுரம், மைல்கல் ஆகிய பகுதிகள் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. மதுக்கரை வனச்சரக பகுதியில் யானை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம். மதுக்கரை அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. ஏராளமான குடியிருப்புகள் உள்ள இந்த பகுதிக்கு அடிக்கடி யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வருவதும் வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சுகுணாபுரம் குடியிருப்புப் பகுதியில் மாலை நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்த குடியிருப்புக்குள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தை மலை மீது இருக்கும் காட்சிகளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள கோலமாவு மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால், அப்பகுதி மக்கள் அச்சம்@abpnadu pic.twitter.com/wGV38dyZGy
— Prasanth V (@PrasanthV_93) November 30, 2021">
சிறுத்தையை நேரில் பார்த்த சிலர் மதுக்கரை வனத் துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை வனத் துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து சுகுணாபுரம் கோலமாவு மலை பகுதியில் உள்ளவர்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ப்பதற்காக தனியாக செல்ல வேண்டாம் எனவும் வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தும் இதுவரை சிறுத்தையை பிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும். கால்நடை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்