கோவையில் தலைவர் பதவிகளுக்கு திமுகவினர் இடையே மோதல் - வால்பாறை நகராட்சி, அன்னூர் பேரூராட்சி தேர்தல்கள் ஒத்திவைப்பு
பேரூராட்சி அலுவலகத்தில் திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் வாக்குச்சீட்டுகள் கிழிக்கப்பட்டு அலுவலக ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் கோவையில் பல்வேறு இடங்களில் திமுக தலைமை உத்தரவை மீறி, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு திமுகவினர் போட்டியிட்டு கைப்பற்றினர். சில இடங்களில் திமுகவினர் இரு தரப்பினராக பிரிந்து போட்டியிட்ட சம்பவங்களும் நடைபெற்றது.
கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 7 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தலா ஒரு இடங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றன. மீதமுள்ள 4 இடங்கள் சுயேச்சைகள் வசம் சென்றன. பெரும்பான்மையான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வென்றுள்ள நிலையில், ஏற்கனவே அன்னூர் பேரூராட்சியில் சுயேச்சையாக வென்று பேரூராட்சி துணைத் தலைவராக இருந்த விஜயகுமார், இம்முறை திமுக சார்பில் 10 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவரை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. இந்த நிலையில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக திமுக சார்பில் 6வது வார்டில் போட்டியிட்ட பரமேஸ்வரன் பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் வாக்குச்சீட்டுகள் கிழிக்கப்பட்டு அலுவலக ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பேரூராட்சி அலுவலக வளாகம் பதற்றமான சூழலில் காணப்பட்ட நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அன்னூர் பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல வால்பாறை நகராட்சி தேர்தலில் 21 வார்டுகளில் திமுக 19 வார்டுகளை கைப்பற்றியது. இதனையடுத்து திமுக தலைமையின் சார்பாக 10 ஆவது வார்டில் வெற்றி பெற்ற காமாட்சி கணேசன் நகராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நகராட்சியின் தலைவருக்கான மறைமுக தேர்தலில் அவருக்கு எதிராக 14 வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அழகு சுந்தரவள்ளி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்து இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரையும் கலைந்து போகுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் நடந்த மறைமுக தேர்தலில் அழகு சுந்தரவல்லி 12 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில் காமாட்சி கணேசனின் ஆதரவாளர்கள் தேர்தல் நடதும் இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். திமுக தலைவர் அறிவித்த வேட்பாளருக்கு நகராட்சி தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்று சப்தமிட்டனர். அழகு சுந்தர வள்ளி தனக்கு வாக்களிக்க உறுப்பினர் ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டினர். இதன் காரணமாக வால்பாறை நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.