இன்ஸ்டாகிராம் பயன்படுத்த எதிர்ப்பு: வீட்டை விட்டு வெளியேறிய மாணவி! இன்ஸ்டாகிராம் மூலமாகவே மீட்ட போலீசார்..!
செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் செயல்பாட்டில் இருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் மாணவியை இன்ஸ்டாகிராம் மூலமாக தேடி கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்ட போது, அம்மாணவிக்கு பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர். அதன் மூலம் மாணவி பாடம் படித்து வந்தார். அப்போது மாணவி தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பதிவேற்றம் செய்து கொண்டார். பின்னர் செல்போனில் இன்ஸ்டாகிராமில் அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். இதனைக் கண்ட மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தக் கூடாது என கண்டித்துள்ளனர்.
பெற்றோரின் கண்டிப்பால் மனவேதனை அடைந்த சிறுமி தனது சக இன்ஸ்டாகிராம் தோழியிடம் மனம் விட்டு பேசியிருக்கிறார். பின்னர் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போனார். மாணவியை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தினர். மேலும் காணாமல் போன மாணவியை தேடும் பணியிலும் ஈடுபட்டனர்.
அப்போது மாணவி தான் பயன்படுத்திய செல்போனுடன் மாயமானது தெரியவந்தது. அதேசமயம் அவரது செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் செயல்பாட்டில் இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் மாணவியை இன்ஸ்டாகிராம் மூலமாக தேடி கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதன்படி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருக்கும் தோழி ஒருவரின் உதவியை நாடினர். அவரை மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோ பேச வைத்தனர். அதில் மாணவி ரெயிலில் சென்று கொண்டு இருந்ததால் அவரது பேச்சு விட்டுவிட்டு கேட்டுள்ளது. மேலும் வீடியோ காட்சியில் மாணவி ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்துக் கொண்டிருப்பதும், காட்பாடி பகுதியில் இரயில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் வை - பை வசதி மூலம் மாணவி இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்திக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கோவையில் இருந்து எந்த இரயில் அந்த நேரத்தில் காட்பாடி பகுதிக்கு செல்லும் என்பதை காவல் துறையினர் தேடிய போது, அந்த ரெயில் கோவை - சென்னை விரைவு ரெயில் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் ரெயில் காட்பாடியில் இருந்து புறப்படுகின்ற நேரம், அடுத்த இரயில் நிலையத்தை சென்றடையும் நேரத்தை கணித்துள்ளனர். அதன்படி அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர், கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர் மாணவி குறித்த தகவலை தெரிவித்தனர். மாணவி முன்பதிவில்லாத பெட்டியில் இருப்பதையும், மாணவி புகைப்படத்தை அனுப்பியதோடு, அடையாளங்களையும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு சென்ற போது, இரயில்வே காவல் துறையினர் தயாராக காத்திருந்தனர். அப்போது இரயிலில் பயணம் செய்த மாணவியை மீட்டு, கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மாணவியிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னையை சேர்ந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதும், பெற்றோர் கண்டித்ததால் அவருடன் தங்குவதற்காக சென்னைக்கு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவியை எச்சரித்த காவல் துறையினர் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.