Crime: கோவையில் நடந்த தொடர் நகை திருட்டு.. 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது - 50 பவுன் நகைகள் பறிமுதல்
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்து, கோவில் உள்ளிட்ட இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், திருட்டு மூலம் கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் நகைப் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, மாநகரில் பல்வேறு இடங்களில் கண்காணிக்கப்பட்டு வந்தது. அப்போது டவுன் ஹாலில், 3 பெண்கள் ஓடி சென்று ஆட்டோவில் ஏறி செல்வதை காவல் துறையினர் பார்த்தனர். அந்த ஆட்டோ போக்குவரத்து நெரிசலுக்கு இடையே சென்றதால் அவர்களால் உடனே பிடிக்க முடியவில்லை. பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து அந்த ஆட்டோவின் எண்ணை காவல் துறையினர் கைப்பற்றினர்.
3 பெண்கள்:
ஆட்டோவின் விவரங்களை சேகரித்து டிரைவரிடம் காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் அந்த, 3 பெண்களை அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டதாகவும், 100 ரூபாய் வாடகைக்கு, 200 ரூபாய் தந்ததாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை பார்த்தனர். அதில் அந்த பெண்கள் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒரு பையை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்க்கு வந்ததும், அங்கு ஒரு வாலிபரிடம் போனை வாங்கி பேசி, பேருந்தில் ஏறி சென்றதும் பதிவாகி இருந்தது. பின்னர் போனை கொடுத்த வாலிபரை பிடித்து, அப்பெண்கள் பேசிய தொடர்பு எண்ணை கைப்பற்றினர்.
பின்னர் அந்த எண்ணை காவல் துறையினர் டிராக் செய்த போது மேட்டுப்பாளையத்தை காட்டியதால் அங்கு சென்ற போது, அவர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டது தெரியவந்தது. பின்னர் அந்த எண் சென்னையில் இருப்பது தெரிந்ததால், தனிப்படை காவல் துறையினர் அக்கும்பலை பிடிக்க சென்னை சென்றனர். அப்போது காவல் துறையினர் சென்ற வேன் சேலம் அருகே விபத்துக்குள்ளாகி, காவலர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சேலத்தில் சிகிச்சை பெற்று கோவை திரும்பினர். ஆனாலும் போலீசார் அந்த எண்ணை தொடர்ந்து டிராக் செய்து வந்த போது, மீண்டும் அந்த கும்பல் கோவை மருதமலைக்கு வந்திருந்தது தெரிந்தது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு:
அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் 3 பெண்களையும், அவர்களுக்கு ஐடியா தந்து வந்த ஒருவரையும் மடக்கி பிடித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் பரமக்குடியை சேர்ந்த ரவி (47), அவரது மனைவி பழனியம்மாள் (40), உறவினர்கள் வனிதா (37), நதியா (37) என்பது தெரிந்தது.
அதில், ரவி அவர்களை வழி நடத்த, 3 பெண்களும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்து, கோவில் உள்ளிட்ட இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், திருட்டு மூலம் கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர் 50 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்