Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: விராட் கோலி இன்று ராஞ்சியில் விளாசிய சதம் மூலமாக சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் முதல் ஒருநாள் போட்டியில் ராஞ்சியில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் அபார சதம், ரோகித் - ஜடேஜாவின் அரைசத உதவியுடன் 350 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ரன் மெஷின் கோலி சாதனைகள்:
ரன் மெஷின் என்று ரசிகர்களால் அன்புடன் வர்ணிக்கப்படும் விராட் கோலி இந்த போட்டியில் 120 பந்துகளில் 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் 135 ரன்கள் எடுத்தார். விராட் கோலிக்கு இது 52வது சதம் ஆகும். இந்த சதம் மூலமாக விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
1. இந்த சதம் மூலமாக ஒரு தனிப்பட்ட வடிவ கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதம் விளாசியதே ஒரு தனிப்பட்ட வடிவத்தில் அதிக சதமாக இருந்த நிலையில், அவரின் 14 ஆண்டுகால சாதனையை இன்று விராட் கோலி முறியடித்துள்ளார்.
2. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விராட் கோலி விளாசிய 6வது சதம் இதுவாகும். இந்த சதம் மூலமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கரும், டேவிட் வார்னரும் 5 சதங்களுடன் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
3. சொந்த மண்ணில் அதிக அரைசதம் விளாசிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து விராட் கோலி பறித்துள்ளார். சச்சின் இதற்கு முன்பு இந்தியாவில் மட்டும் 58 அரைசதம் விளாசிய நிலையில், விராட் கோலி 59 அரைசதங்கள் விளாசி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
4. தோனியின் சொந்த மைதானமான ராஞ்சி விராட் கோலிக்கு ராசியான மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் மட்டும் 519 ரன்களை 6 இன்னிங்சில் விளாசியுள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 1 அரைசதம் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 110.19 ஆகும். இந்தாண்டு விராட் கோலி 11 ஆட்டங்களில் ஆடி 484 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 53.77 ஆகும். அதில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும்.
நெருக்கடிக்கு பதிலடி:
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வைக்க தொடர் அழுத்தம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் முதல் 2 போட்டிகளில் டக் அவுட்டான நிலையில் கடைசி போட்டியில் அபார அரைசதம் விளாசி அசத்தினார். இந்த சூழலில், இன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியிலே அபார சதம் விளாசி அசத்தியுள்ளார்.
37 வயதான விராட் கோலி இதுவரை 306 ஒருநாள் போட்டிகளில் ஆடி 294 இன்னிங்சில் பேட் செய்துள்ளார். அதில் 14 ஆயிரத்து 390 ரன்களை குவித்துள்ளார். இதில் 52 சதங்கள், 75 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 183 ரன்கள் குவித்துள்ளார். 2027 உலகக்கோப்பையில் ஆட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு ஆடி வரும் விராட் கோலி சதம் மூலமாக தனது திறமையையும், உடற்தகுதியையும் பிசிசிஐக்கு மீண்டும் நிரூபித்துள்ளார்.




















