Crime : கஞ்சா பயிரிட்ட 4 பேர் கைது.. 15 கிலோ கஞ்சா செடி பறிமுதல்.. கோவை போலீசார் அதிரடி..
கோவை மாவட்டம் பெரியநாய்க்கன்பாளையம் அருகே கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கஞ்சா இல்லாத கிராமங்களை உருவாக்கும் முயற்சியாக கஞ்சா புழக்கம் உள்ள கிராமங்களைக் கண்டறிந்து, அப்பகுதியில் கஞ்சா விற்பனையை தடுத்தல், குற்றவாளிகளைக் கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியநாய்க்கன்பாளையம் அருகே உள்ள பசுமலை வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 150 செண்ட் பரப்பளவில் ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பசுமலைப் பகுதியை சேர்ந்த செல்லன் (63) என்பவருக்கு சொந்தமான 100 செண்ட் இடம் மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த பழனிசாமி (53) என்பவருக்கு சொந்தமான 50 செண்ட் இடத்தில் கஞ்சா பயிரிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் செல்லனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து 3.200 கிலோ கஞ்சா செடிகள். பழனிசாமிக்கு சொந்தமான இடத்தில் இருந்து 11.400 கிலோ கஞ்சா செடிகள் என மொத்தம் 14.600 கிலோ எடையுள்ள 300 கஞ்சா செடிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல அப்பகுதியில் அதேகிராமத்தை சேர்ந்த ராஜப்பன் (33)ம் வேலுசாமி (28) ஆகியோரும் கஞ்சா பயிரிட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து செல்லன், பழனிசாமி, ராஜப்பன், வேலுசாமி ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். கஞ்சா பயிரிடப்பட்ட இடத்தை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் கஞ்சா பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதேபோல கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சூலூர் காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சூலூரைச் சேர்ந்த கோகுல் (26) மற்றும் ராவத்தூர் பகுதியைச் சேர்ந்த சேதுபதி (26) ஆகியோர் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் 2.300 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதேபோல மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள அறிவொளி நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (26) என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது விருதுநகரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த 1.250 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.