BJP Office : கோவை : பாஜக அலுவலகத்தின் மீதும் துணிக்கடையின் மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு ; காவல்துறையினர் விசாரணை
கோவையில் பாஜக அலுவலகம் மற்றும் துணிக்கடை ஆகியவை மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பாஜக நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் தினசரி வந்து செல்வது வழக்கம். பாதுகாப்பு காரணங்களுக்காக 24 மணி நேரமும் பாஜக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பாஜக அலுவலகத்தை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு பாஜக அலுவலகத்திற்கு அருகே விழுந்தது. அதேசமயம் பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசாம்பாவிதங்கள் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாஜகவினர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த காட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வெடிக்காத பெட்ரோல் குண்டு மற்றும் பாஜக அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் விகேகே மேனன் சாலையில் செல்லும் ஒரு இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பாஜக அலுவலகத்திற்கு அருகே விழும் காட்சிகளும், பாஜக தொண்டர்களும், காவல் துறையினரும் அடுத்தடுத்து பதட்டத்துடன் வந்து பார்க்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இக்காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பு அக்கட்சி தொண்டர்கள் குவிந்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்தும், அச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒப்பணக்கார வீதியில் வட மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான மாருதி என்ற துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் கடையின் முன்பாக இருந்த அட்டை மீது விழுந்து தீப்பற்றியுள்ளது. கடையில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கடை வீதி காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டார்களா அல்லது வேறு வேறு நபர்களா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். .
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்