உதகையை உறைய வைக்கும் உறைபனி; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உறை பனி பொழிவு காரணமாக உதகை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியசும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் 1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். குறிப்பாக டிசம்பர் மாதம் கடைசி வாரம் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் உறைபனி ஏற்படும். இந்த காலங்களில் வெப்பநிலை அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தை தொடும். சில நாட்களில் வெப்பநிலை மைனசுக்கும் கீழ் இறங்கும். நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறி பயிர்கள் கருகிவிடும். இந்த நிலையில் கால நிலை மாற்றத்தின் காரணமாக தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கியது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பெய்த தொடர் மழை காரணமாக பனி காலம் சற்று தாமதமாக தொடங்கியது. இதன் காரணமாக வெகு தாமதமாக நீலகிரியில் உறைபனி பொழிவு தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவியது.
நீலகிரி மாவட்டத்தில் தாமதமாக துவங்கிய பனி பொழிவால் தொடக்கத்தில் குளிரின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக அதிகாலை நேரங்களில் நீர் பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் குளிரின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து இன்று உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறை பனி பொழிவு ஏற்பட்டது. இதனால் உதகை குதிரை பந்தய மைதானம், காந்தள், தலைக்குந்தா, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் உறைபனி விழுந்தது. அப்பகுதியில் உள்ள புல்வெளிகள் மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனிப்பொழிவு காட்சி அளித்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் உறை பனி சுமார் அரை அடி அங்குலத்திற்கு உறை பனி படிந்தது.
உறை பனி பொழிவு காரணமாக உதகை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியசும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் 1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவாகி உள்ளது. இந்த பனி பொழிவு காரணமாக உதகை பகுதியில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் காரணமாக மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தொடர் பனிப்பொழிவு காரணமாக தேயிலைத் தோட்டங்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.கடும் குளிரிலிருந்து தப்பிக்க பொதுமக்கள், தீமூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். பகல் நேரங்களிலும் குளிர் நிலவி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.