கோவை: 50 ரூபாய் கொடுக்க மறுத்த உறவினரை கத்தியால் குத்திய நபர் கைது
ராமசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுதர்சன் (50) என்பவர் மணிகண்டனிடம் 50 ரூபாய் பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், மணிகண்டன் பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் 50 ரூபாய் கொடுக்க மறுத்த உறவினரை கத்தியால் குத்திய தொழிலாளியை பேரூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாச்சாமி (65). இவரது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள், திருமணம் முடித்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வசித்து வரும், அய்யாசாமியின் மூத்த மகன் மணிகண்டன், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தந்தையை பார்க்க கோவை வந்துள்ளார். அப்போது, மணிகண்டன் சுண்டக்காமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அவரது உறவினரான ராமசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுதர்சன் (50) என்பவர் மணிகண்டனிடம் 50 ரூபாய் பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், மணிகண்டன் பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சமாதானம் ஆகி இருவரும் அங்கிருந்து சென்றனர்.
இந்நிலையில் மீண்டும் சுதர்சன் தனது நண்பரான ராஜேந்திரன் என்கிற மாரிசாமி (48) என்பவருடன் அய்யாசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு 50 ரூபாய் பணம் கேட்டு கொடுக்காததை கூறி, மணிகண்டனை வெளியே வரச் சொல்லி தகாத வார்த்தைகளில் பேசி சுதர்சன் சத்தம் போட்டுள்ளார். அப்போது வெளியே வந்த அய்யாசாமியிடம், சுதர்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவருடன் வந்த ராஜேந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அய்யாச்சாமியை குத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன், ஓடி வந்து தடுத்த போது அவருக்கும் கத்தி குத்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் மணிகண்டன் மற்றும் அய்யாசாமி இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் மீட்டு இருவரையும் சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அய்யாச்சாமி அளித்த புகாரின் பேரில், ராஜேந்திரன் என்கிற மாரிசாமி (48) மற்றும் சுதர்சன் (50) இருவர் மீதும் பேரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ராஜேந்திரனை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ள சுதர்சனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வெறும் ஐம்பது ரூபாய் கொடுக்க மறுத்ததால், உறவினரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற நபர்களால் சுண்டக்காமுத்தூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

