‘தமிழகத்தில் மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை’ - அமைச்சர் செந்தில் பாலாஜி
பல்வேறு இடங்களில் கனமழை பெய்தாலும் பாதிப்பு இல்லாத வகையில் சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது. மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. 11 ஆயிரம் பேர் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 20 ம் தேதியன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதல் நிலை கலந்தாய்வுக் கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சி.வி. கணேசன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”கோவை மாநகராட்சியால் கடந்தாண்டு மழையின் போது பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன. மேம்பாலங்கள் அடியிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. சரியான மழைநீர் வடிகால் இல்லாத சூழல் இருந்தது. கடந்தாண்டு பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, இந்தாண்டு பாதிப்பு இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோவையில் நேற்று ஒரேநாளில் அதிகபட்சமாக 10.74 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. இவ்வளவு மழை பெய்தாலும் கூட கோவை மாநகரில் எந்த பாதிப்பும் இல்லை. மழை நீர் தேங்காத அளவில் முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்கள் தூர்வாறப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்ற மோட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. இன்னும் மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் கனமழை பெய்தாலும் தமிழகம் முழுவதும் பாதிப்பு இல்லாத வகையில் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மின் வாரியத்தில் 11 ஆயிரம் பேர் கூடுதலாக சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின் வாரியம் கடனில் உள்ளது. இருந்தாலும் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு குறைந்த மின் கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களை விட குறைவு. தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை வருங்காலத்தில் நிதி நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். கோவையில் சாலைகள் சீரமைப்பு பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
அமைச்சர் சி.வி. கணேசன் பேசும் போது, ”வேலைவாய்ப்பு முகாமினால் இதுவரையிலும் 1 இலடச்சத்து 7 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். 67 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று உள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலையில்லாத நிலை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடைபெறுகிறது. 20 ஆயிரம் பேர் வரையிலும் பொள்ளாச்சி கலந்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. துறை வாயிலாக வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வருகிறோம். 51 சதவீதம் உயர் கல்வியில் வளர்ச்சி உள்ளது. இந்தியாவிலே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழகத்தின் பொற்காலம் இது. அனைத்து துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்