தவறாக எழுதப்பட்டிருந்த திருக்குறள் - சுட்டிக்காட்டி திருத்திய அமைச்சர் சி.வி. கணேசன்
திருக்குறள் தவறாக எழுதப்பட்டு இருந்ததை கவனித்த அமைச்சர் சி.வி. கணேசன், வரிவரியாக படித்து காட்டி தவறை சுட்டிக்காட்டி பிழை இல்லாமல் சரியாக திருத்தி எழுதுமாறும் அறிவுறுத்தினார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் பகுதியில் ஆண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பெண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று ஆய்வு செய்தார். அங்கு இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அமைச்சர் சி.வி. கணேசன் கலந்துரையாடினார். அப்போது ஆண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சரை வரவேற்கும் வகையில் பலகையில் ’தொட்டனைதுத் தூறும்’ என்ற திருக்குறள் மற்றும் விளக்கம் எழுதப்பட்டு இருந்தது. அந்த திருக்குறளில் ‘தொட்டனைத்துத் தூறும்’ என்பதற்கு பதிலாக ‘தொட்டனைத்து ஊறும்’ என தவறாக எழுதப்பட்டு இருந்தது. இதனைக் கவனித்த அமைச்சர் சி.வி. கணேசன் திருக்குறள் தவறாக எழுதப்பட்டு இருந்ததை, வரிவரியாக படித்து காட்டி தவறை சுட்டிக்காட்டினார். மேலும் திருக்குறளை பிழை இல்லாமல் சரியாக திருத்தி எழுதுமாறும் அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் சி.வி. கணேசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டில் 102 தொழிற்பயிற்சி நிலையங்களில் 2871 கோடி ரூபாய் செலவில் 72 நவீன தொழில்நுட்ப மையத்தை உருவாக்கி கொடுத்துள்ளார். இதனால் இளைஞர்கள் உலக தரம் வாய்ந்த நிறுவனங்களில் பணி புரியும் வாய்ப்பை முதலமைச்சர் உருவாக்கி தந்துள்ளார். கோவை ஐ.டி.ஐ.யில் 3.73 கோடி ரூபாயில் கட்டிடம் கட்டி தரப்பட்டுள்ளது. 31 கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் வாங்கி தரப்பட்டுள்ளது. இதனை அரசும், டாடா டெக்னாலாஜி நிறுவனமும் இணைந்து செய்துள்ளோம்.
கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 1400 க்கும் மேற்அட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நான் முதல்வன் திட்டத்தை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்கள் என்ன படிக்கலாம்?, என்னென்ன பயிற்சி பெறலாம்?, உதவி தொகை பெறுவது எப்படி?, வேலை குறித்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு இணையதளம் வடிவமைக்கப்பட்டது. அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கட்டாயம் வேலைவாய்ப்பு உருவாக்குவதில் அரசு குறிக்கோளாக உள்ளது. படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை இருக்க கூடாது. மாணவர்கள் படித்து முடித்த உடன் வேலைக்கு செல்லும் நிலையை முதலமைச்சர் உருவாக்கி தந்துள்ளார்.
53 ஐ.டி.ஐ.களில் 100 சதவீதமும், 73 ஐ.டி.ஐ.களில் 93 சதவீதமும் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. அதிகளவில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டு 95% அளவிலான மாணவர் சேர்க்கையை எதிர்பார்க்கிறோம். ஐ.டி.ஐ. படிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை முதலமைச்சர் ஏற்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை ஆய்வு செய்யும் அமைச்சர் சி.வி. கணேசன், பிற்பகலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற உள்ள மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் குறித்து முன்னேற்பாடு பணிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்