100 வாக்குறுதிகள்... 500 நாட்களில் நிறைவேற்றுவோம் - அண்ணாமலை வெளியிட்ட தேர்தல் அறிக்கை
வன்முறையும் அட்டகாசமும் செய்வதற்கு என்று பிறந்த கட்சி திமுக. அங்கு கைகலப்பு வந்ததற்கு காரணம் திமுகவினர். நான் எந்த தேர்தல் விதிமுறைகளும் ஈடுபடவில்லை.
கோவை அவிநாசி சாலையில் உள்ள பாஜக தேர்தல் பணிமணையில், கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டார். அதில் கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும், கோவையில் ஐஐஎம் அமைக்கப்படும், ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்துவோம். போதை தடுப்பு மையத்தை கோவையில் நிறுவப்படும், 250 மக்கள் மருந்தகங்கள் உருவாக்கப்படும், கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு கோவைக்கு வழங்கிய நிதியை சிறப்பு தணிக்கை செய்வோம் எனவும், அதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 100 வாக்குறுதிகளை 500 நாட்களில் நிறைவேற்றுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று தான் விதிமுறை உள்ளது. வேட்பாளர் பொதுமக்களை இரவு 10 மணிக்கு மேல் சந்திக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. பிரச்சாரம் முடிய இரவு 12 ஒரு மணி எல்லாமாகி இருக்கிறது. சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை என்றால் மைக்கை அணைத்துவிட்டு கைகுலுக்கி, வணக்கம் சொல்லிவிட்டு வருவது வழக்கம். அனுமதிக்கப்பட்ட இடங்களில் கடைசி பாய்ண்டுகள் செல்வதற்கு தாமதமாகி விடுகிறது. காவல்துறை அனுமதி கொடுத்த இடத்துக்கு தான் சென்றிருக்கிறோம்.
செய்தியாளர்களுடன் வாக்குவாதம்
நான் இரவு 10 மணிக்கு மேல் மைக்கில் பேசிய வீடியோவை காவல்துறையை வெளியிட வேண்டியதுதானே? திமுககாரர்கள் எப்பவும் கையில் கட்டு போட்டுக்கொண்டு மருத்துவமனையில் போய்படுப்பது வழக்கம்தான். இது ஒன்றும் புதிது கிடையாது. திமுகவிற்கு கோவை மக்களவைத் தொகுதியில் டெபாசிட் கிடைக்காது. கோவை மக்களவைத் தொகுதியில் இவ்வளவு எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியிடம் அனைத்து பவரும் இருக்கிறது. பாஜகவினர் அடித்தார்கள் என்று சொல்வது காதில் பூசுற்றுவதை போன்று இருக்கிறது. வன்முறையும் அட்டகாசமும் செய்வதற்கு என்று பிறந்த கட்சி திமுக. அங்கு கைகலப்பு வந்ததற்கு காரணம் திமுகவினர். நான் எந்த தேர்தல் விதிமுறைகளும் ஈடுபடவில்லை” என்ற அவர், தொடர்ச்சியாக பாஜகவினர் மீது தேர்தல் புகார்கள் வருவது குறித்த கேள்விக்கு, பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “10 மணிக்கு மேல் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக செல்லவில்லை. நூற்றுக்கு மேற்பட்டோர் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். திருப்பூரில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை பா.ஜ.கவினர் மிரட்டிய வீடியோவை நான் பார்க்கவில்லை. திமுக முதன்முதலாக தமிழகத்தில் டெபாசிட் இழக்க கூடிய தொகுதி கோவை மக்களவைத் தொகுதி. பத்து மணிக்கு மேல் எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை. மக்களிடம் மன்னிப்பு தான் கேட்டுக்கொண்டேன். எங்களைப் பொருத்தவரை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கோவையில் தங்க சுரங்கத்தையே கொட்டினாலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி். தேர்தலை நிறுத்துங்கள் என்று நாங்கள் பெட்டிசன் கொடுக்கப் போவதில்லை. திமுக என்ன செய்தாலும் அதை பாஜக தொண்டன் தாங்குவான். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை பலமுறை குறைந்துள்ளது. திமுகவினர் குறைப்பதாக சொன்னார்களே குறைத்தார்களா? சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு இருக்க வேண்டும் உங்களுக்கும், எனக்கும் என மீண்டும் அவர் பத்திரிகையாளருடன் வாக்குவாதம் செய்தார்.