கோவை : ஒருவழியாக வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது சிறுத்தை.. அடுத்த நடவடிக்கை தெரியுமா?
ஐந்து நாட்களாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதனிடையே பலமுறை கூண்டு வரை வந்த சிறுத்தை சிக்காமல், போக்குக்காட்டி வந்தது.
கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம், மைல்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. சிறுத்தை குடியிருப்பு பகுதிகளில் நடமாடியதால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வந்தனர். இதையடுத்து வனத்துறையினர் கூண்டு அமைத்தும், கண்காணிப்பு கேமரா பொருத்தியும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பி.கே.புதூர் பகுதியில் உள்ள பழைய குடோன் ஒன்றில், கடந்த 17 ம் தேதி சிறுத்தை ஒன்று பதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குடோனை சுற்றி வலை விரிக்கப்பட்டும், குடோன் நுழைவு வாயிலில் இரண்டு கூண்டுகள் அமைத்து அதற்குள் மாமிசம் வைத்து சிறுத்தையை கூண்டிற்குள் வரவழைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். பல்வேறு முயற்சிகளை வனத் துறையினர் மேற்கொண்ட நிலையிலும், சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டியது. இதனால், மின் விளக்குகள் அமைத்து இரவு நேரத்தில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோனில் சிறுத்தையின் நடவடிக்கைகளை கண்காணிக்க, ட்ரோன் கேமரா பறக்க விடப்பட்டது. ஐந்து நாட்களாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதனிடையே பலமுறை கூண்டு வரை வந்த சிறுத்தை சிக்காமல், போக்குக்காட்டி வந்தது.
சிறுத்தை தானாக கூண்டில் வந்து சிக்கும் வரை வனத்துறையினரும் பொறுமை காத்தனர். தினமும் மிக எச்சரிக்கை உணர்வுடன் இருந்த சிறுத்தை கூண்டிற்குள் வராமல் தவிர்த்தபடி இருந்தது. இந்நிலையில் 5 நாட்களாக உணவு, தண்ணீர் போன்றவை இல்லாமல் இருந்த சிறுத்தை உணவுக்காக வெளியேற குடோனில் இருந்து வெளியேற முயன்றது. அப்போது முன் பக்க வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கிக்கொண்டது. இது குறித்து கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறுகையில், ”5 நாட்களாக இரவு, பகலாக தொடர்ந்து வனத்துறையினர் பொறுமை காத்து வந்த நிலையில் நள்ளிரவில் சிறுத்தை சிக்கியது. கடந்த இரு தினங்களாக கூண்டிற்குள் வந்த சென்ற சிறுத்தை சிக்காமல் இருந்தது. தானாக கூண்டு மூடிக்கொள்ளும் தன்மை இருந்தாலும், சிறுத்தை கூண்டிற்குள் வந்தவுடன் வனத்துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு கூண்டை மூடியதால் சிறுத்தை சிக்கியது. தலைமை வன உயிரின பாதுகாவலர் உத்தரவின் பேரில் கோவை மண்டல வனப்பகுதியிலேயே சிறுத்தையை பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட திட்டமிட்டுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுத்தை பிடிபட்டதால் குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.