கோவை அருகே வெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலம் ; வால்பாறை சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோவை மாநகர பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை பாலக்காடு சாலையில் உள்ள குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நீரின் ஓட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் யாரும் அணைக்கு செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாறை மலைப்பாதையில் உள்ள 22 ஆவது கொண்டை ஊசி வளைவில் பலத்த மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டு சாலையின் தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள வால்பாறை, சின்னக் கல்லார், சக்தி எஸ்டேட், தல நார் எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதி அப்பர் நீராறு, கவியருவி, ஆழியாறு, நவமலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நவமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் தரிசனம் செய்ய தடை விதித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்