‛கிராம சபைக் கூட்டங்களை நடத்துங்கள்‛ -கோவை ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு!
2020 ஜனவரிக்கு பின் கிராம சபை நடக்கவே இல்லை என்பது தான் எங்கள் குறை. அதை மாவட்ட ஆட்சியரிடம் மனு மூலம் தெரிவித்துள்ளோம் - கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக கோவைக்கு வருகை தந்தார். நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, கட்சி நிர்வாகிகள் உடன் கமல்ஹாசன் வந்தார். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து, கிராம சபைக் கூட்டங்களை முறையாக நடத்தக் கோரி கோரிக்கை மனு அளித்தார். அதில் கிராம ஊராட்சி அமைப்பின் வேரான கிராம சபை விழிப்புணர்விற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் வருகின்ற ஆகஸ்ட் 15 ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தனியாக செய்தியாளர் சந்திப்பு நாளை ஏற்பாடு செய்யப்பட்டு்ள்ளது. கிராம சபை பஞ்சாயத்தை நடத்த கோரி மனு அளித்துள்ளோம். 2020 ஜனவரிக்கு பின்பு கிராம சபை நடக்கவே இல்லாத என்பது தான் எங்கள் குறை. அதை மாவட்ட ஆட்சியரிடம் மனு மூலம் தெரிவித்துள்ளோம். அதனை கலெக்டரும் ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்த கிராம சபை விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கின்றோம். பட்ஜெட்டில் கிராம சபைகளுக்கு என தனி ஒதுக்கீடு குறித்து விளம்பரத்தி இவ்வளவு கொடுக்கிறோம், இந்த நேரத்தில் கொடுக்கிறோம் என்பதை அறிவிக்க வேண்டும் என்பதையும் விண்ணப்பமாக கொடுத்துள்ளோம். கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை. அதனால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நன்றி நெஞ்சில் இருக்கின்றது. பார்க்க வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். இன்று சில இரங்கல் வீடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கின்றது. விரிவாக நாளை பேசுகின்றேன்" என அவர் தெரிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிட்டார். அத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கமல்ஹாசனுக்கும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் தேர்தலில் வாக்களித்த கோவை தெற்கு தொகுதி வாக்காளர்களுக்கு இன்றும், நாளையும் நன்றி தெரிவிக்க திட்டமிட்டு, கமல்ஹாசன் கோவைக்கு வந்தார். ஆனால் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி இருப்பதால், நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கமல்ஹாசன் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X