மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்று தொடக்கம்.. வீடுகளில் கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்!
Kalaignar Magalir Urimai Scheme : கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள காமராஜர் வீதியில் உள்ள வீடுகளில் கோலமிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
![மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்று தொடக்கம்.. வீடுகளில் கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்! Kalaignar Magalir Urimai Scheme Coimbatore Women thanked the chief Minister who gave women's rights money coimbatore TNN மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்று தொடக்கம்.. வீடுகளில் கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/29f3bd76aa6b5ee7d242c19457cbfdff1694749076420188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து அதற்கான ஏடிஎம் கார்டுகளையும் வழங்குகிறார். இதனிடையே நேற்றே பல பெண்களின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டு இன்ப அதிர்ச்சி அளித்தது தமிழ்நாடு அரசு. இத்திட்டம் துவங்கப்பட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள காமராஜர் வீதியில் உள்ள வீடுகளில் கோலமிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் கோலமிட்ட பெண்கள், கலைஞர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி என்ற வாசகத்தையும் எழுதி இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ”திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார். இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நேற்றே பலர் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். முதலமைச்சர் சொன்னதை செய்துள்ளார். மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். காமராஜர் வீதியில் உள்ள வீடுகளில் கோலமிட்டு உரிமைத்தொகை வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக முதல்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நிதிச்சுமை காரணமாக இத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதால் இத்திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் என அழைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மார்ச் - ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த திட்டத்தில் தகுதியுள்ள குடும்ப பெண்களை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. ரேஷன்கடை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களால் வீடு,வீடாக சென்று விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு 3 கட்ட முகாம்கள் நடத்தி பெறப்பட்டது. பின்னர் இவற்றின் உண்மைத்தன்மை அறிய ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கொடுக்கப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட்டது. திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியுள்ள குடும்ப பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்குக்கு ரூ.1, 10 பைசா அனுப்பி சோதனை செய்யப்பட்டது. அதேசமயம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன காரணம் என்பது குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி வந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)