நாடாளுமன்ற தேர்தலுக்காக அவசரகதியில் ராமர் கோயிலை திறக்கிறார்கள் - கீ.வீரமணி குற்றச்சாட்டு
”எந்த வகையிலும் தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால், பக்தி மாத்திரையின் மூலமாக தேர்தல் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை கொடுத்து மீண்டும் வரலாம் என இறுதியாக ராமனை நம்பி இருக்கிறார்கள்”
கோவையில் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “கோவிலை நம்பி வாக்குகளை பெற தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பிக்கொண்டிருக்கிறார். அதை மக்கள் மத்தியில் தெளிவாக விளக்க இந்தியா கூட்டணி தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது. நாடாளுமன்ற பிரச்சனையில் பிரதமர் வாய் திறக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் நடந்த பேரிடரை கண்டுகொள்ளவில்லை. ஆனால் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு சிறிய பிரச்சனை என்றாலும் கூட ஆயிரம் கோடியை வழங்குகிறார்கள்.
எந்த வகையிலும் தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால், பக்தி மாத்திரையின் மூலமாக தேர்தல் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை கொடுத்து மீண்டும் வரலாம் என இறுதியாக ராமனை நம்பி இருக்கிறார்கள். அதனால் தான் அவசரகதியில் ராமன் கோவிலை கட்டி திறக்க இருக்கிறார். இதுவரை இந்தியா மட்டுமல்ல எந்த நாட்டிலும் கோவிலுக்காக பிரதமர் அடிக்கல் நாட்டி, அதனை திறந்து யாரும் பார்த்தது இல்லை. இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும், இந்த அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக்கப்படுமே தவிர வேறு இல்லை. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தான் உண்மையான ஜனநாயகம்” எனத் தெரிவித்தார்.
சேலம் பெரியார் பல்கலைகழகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை குறித்து பேசிய அவர், ”ஆளுநர் எப்படி நடந்துகொள்கிறார் என மக்கள் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு. அரசியல் அமைப்பு சட்டம் 162 படி ஆளுநர் மாநில அரசின் ஒரு பகுதி மட்டுமே. ஒருவர் மீது அரசு வழக்கு போட்டுள்ள போது, இவர் கிட்டயே செல்ல கூடாது. துணை வேந்தர் வழக்கு தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது, குறிப்பாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் உள்ள போது, ஆளுநர் செல்கிறார். விசாரிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் மாற்றவும், அதனை மறைப்பதற்காகவும் தான் போகிறார். அதிகாரிகள் பார்க்கும் போது ஆளுநரே அவருடன் இருக்கிறார் என அச்சப்படுவார்கள்.
இதை ஒன்றும் செய்ய முடியாது பாஜக ஆள் என்பதற்காகத்தான். பல குற்றங்களை அடுக்கடுக்காக செய்து கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி இதிலும் தனது சுய உருவத்தை காட்டி பாஜக அரசியலை இதிலும் நடைமுறைபடுத்துகிறார். இதன் காரணமாக தான் மாணவர்கள் இன்று அவரை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கின்றனர். தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டங்கள், தடா, பொட சட்டம் போல கொடுமையானது. மனித உரிமைகளை பறிப்பதில் முக்கியமான ஒன்று. காலணி சட்டங்களை போக்கி புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு பதிலாக அதை விட கொடுமையான சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிக்குமா என கேள்வி எழுந்தாலும், அதே நேரத்தில் நாடு முழுவதும் வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.