
கோவையில் தி.மு.க. பிரமுகர் வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை
வாக்காளர்களுக்கு பணன்பட்டுவாடா செய்ய மீனா லோகு வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

கோவை மாநகராட்சி மண்டலத் தலைவர் மற்றும் பைனான்சியர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தேர்தல்:
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொருபுறம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். திமுக பிரமுகரான இவர், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும், மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
பணப்பட்டுவாடா புகார்
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய மீனா லோகு வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 3 கார்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீனா லோகு இல்லத்தில் சோதனை நடத்தினர்.
வீட்டில் இருந்த கார், அலுவலகம், வீடு என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்திய நிலையில், வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்படவில்லை. இதனைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். திமுக பிரமுகர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.
பைனான்சியர் வீட்டில் சோதனை
கோவை துடியலூர் அருகே நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீடு நல்லாம்பாளையம் சபரி கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் இவரது வீட்டிற்கு வந்த வருமா னவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பிற்பகல் 3 மணிக்கு துவங்கிய சோதனை இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவர் அ.தி.மு.க. ஆதரவாளர் எனக் கூறப்படும் நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் அவரிடம் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. ஒரே நாளில் திமுக பிரமுகர் மற்றும் அதிமுக ஆதரவாளர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

