வால்பாறையில் மகளிர் விடியல் பயணத்திட்டம் துவக்கம் : பெண்கள் மகிழ்ச்சி
வால்பாறை உள்ளிட்ட மலை பகுதிகளில் உள்ள பெண்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க விடியல் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
திமுக அரசு பதவியேற்றதும் சாதாரண அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் விடியல் பயணம் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதேசமயம் வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள வால்பாறையில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பாதைகள் என்பதால் அரசுப் பேருந்துகள் மட்டுமே வால்பாறையில் இயங்கி வருகின்றன. ஆனால் விடியல் பயணத்திட்டம் அப்பகுதியில் செயல்படுத்தப்படாதது அப்பகுதி பெண்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால் வால்பாறை போன்ற மலை பகுதிகளில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள், ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் வால்பாறை உள்ளிட்ட மலை பகுதிகளில் உள்ள பெண்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க விடியல் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும், மலைப்பகுதிகளுக்கு புதிய பேருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதனைத்தொடர்ந்து வால்பாறை மலைப்பகுதிகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் விடியல் பயணத் திட்டம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. வால்பாறையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலைஞர் விடுயல் பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் 200 பயனாளிகளுக்கு தையல் மெஷின்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “மகளிர் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கும் விடியல் பயணம் நகரப்பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அத்திட்டம் இதுவரை மலை பகுதிகளில் இல்லாமல் இருந்தது. இன்று விடியல் பயணத்திட்டம் வால்பாறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வால்பாறையில் இயங்கும் 37 பேருந்துகளில் 19 பேருந்துகளில் விடியல் பயணத்திட்டம் மகளிருக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் உள்ள 19 வழித்தடங்களில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியும். ஏற்கனவே மகளிர் விடியல் பயணத்திட்டத்தை நாள் ஒன்றுக்கு 50 இலட்சம் பெண்கள் பயன்படுத்தி முன்னேறி வருகிறார்கள். வால்பாறையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3500 பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். அந்த எண்ணிக்கை இத்திட்டத்தினால் கூடுதலாக உயரும். பெண்கள் மாதந்தோறும் 900 ரூபாயை மிச்சப்படுத்த உதவும்.
ஏற்கனவே 4 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி டெண்டர் விடப்பட்டு புதிய பேருந்துகள் வர ஆரம்பித்துள்ளன. 250 புதிய பேருந்துகள் வந்துள்ளனர். 15 ஆண்டுகள் ஓடிய பேருந்துகள் புதிய பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு 3 ஆயிரம் பேருந்துகள் வாங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார். மலைப்பகுதியில் இயங்கும் பேருந்துகள் புதிய பேருந்துகளாக மாற்றப்படும். வால்பாறைக்கு இயக்கப்படும் 87 பேருந்துகள் புதிய பேருந்துகளாக மாற்றப்படும். கடந்த ஆட்சியில் விட்டு போன ஓய்வு பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் 1500 கோடி ஒதுக்கியதை அடுத்து, தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவும், மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வால்பாறை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறி இருப்பதால், அப்பகுதி பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.