தமிழ்நாட்டில், மேற்கு மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்..
குறைந்துவரும் கொரோனா பாதிப்பு, கூடலூரில் அச்சுறுத்தும் புலி, வால்பாறையில் சிக்கிய புலி, பரளிக்காடு சூழல் சுற்றுலா முன்பதிவு துவக்கம் உள்ளிட்ட முக்கியச் செய்திகள் இதோ...
கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா தலத்திற்கு இந்த வாரம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் முன்பதிவு செய்யலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் www.combatorewilderness.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாவிற்கு அனுமதி வழங்கப்படுமெனவும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரியவர்களுக்கு 550 ரூபாயும், 5 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 450 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள வாளையார் அணையில் மூழ்கிய 3 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. கோவையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் வாளையார் அணைக்கு குளிக்க சென்ற நிலையில், பூர்ணெஷ்வரன், சஞ்சீவ், ஆண்டோ ஆகிய 3 மாணவர்கள் நீரில் மூழ்கினர்.
கோவை – மேட்டுப்பாளையம் பயணிகள் இரயில் துடியலூர் - பெரியநாயக்கன்பாளையம் பகுதி இடையே சென்ற போது தண்டவாளத்தில் ஒருவர் மது போதையில், மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்த முற்பட்டப் போது, ரயில் பெட்டிகள் மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது. இதையடுத்து இரயில் சில அடி தூரம் தாண்டி சென்று நின்ற நிலையில், இரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் இறங்கி இரயில்வே தண்டவாளத்தில் இருந்த நபரை தேடியுள்ளனர். அப்போது அந்த நபருக்கு எந்த வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுற்றித் திரியும் புலியை பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் புலி வனத்துறையினரிடம் சிக்காமல் சுற்றி வருகிறது. கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்ற தோட்ட தொழிலாளி புலி தாக்கி உயிரிழந்தார். மேலும் ஆடு, மாடுகளை புலி அடித்துக் கொன்று வருவதால், கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். தேவன் 1 கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல், வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் இன்று 'வருமுன் காப்போம்' திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.
கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு,வேலையிழப்பு, வறுமை உள்ளிட்ட காரணங்கள் குழந்தை திருமணங்கள் அதிகம் நடப்பதற்கான காரணங்களாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடீஸ் பஜார் பகுதியில் உடல் நலிவுற்ற நிலையில், சுற்றித் திரிந்த புலி பிடிபட்டது. புதரில் பதுங்கி இருந்த புலியை வலைவீசி வனத்துறையினர் பிடித்தனர்.
உக்கடம் மேம்பால பணிகளுக்காக, உக்கடம் சி.எம்.சி காலணியில் 100 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அப்பகுதியில் இருந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. 430 கோடி ரூபாய் செலவில் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவை மாவட்டத்தில் 13 இடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் வருகின்ற 9 ம் தேதி நடபெறுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட 131 வாக்குச்சாவடிகளில் 22 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.