கோவை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று & நாளை சிறப்பு முகாம்: உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா?
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை முழுமையாக தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு உதவவும், பழைய வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருந்ததா? என்பதை கண்டறியவும் சிறப்பு முகாம்கள் இன்று மற்றும் நாளை நடைபெறுகின்றன. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை முழுமையாக தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணி கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வருகின்றனர். இந்த சிறப்பு முகாம்கள் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த முகாம்களில், வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவுவார்கள்.
மேலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் பெயர்கள் 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்ததா என்பதை கண்டறியவும் உதவி செய்வார்கள். அதற்காக, அந்தப் பாகம் எண் மற்றும் வரிசை எண் போன்ற விவரங்களையும் கண்டறிய உதவுவார்கள். இந்த சிறப்புப் பணிக்காக பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்தி, கணக்கெடுப்பு படிவங்களை சரியாக நிரப்பிக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இணையதளம் வழியாகவும் வாக்காளர்கள் தங்கள் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்கும் வசதி உள்ளது. எந்த ஆவணமும் "SIR எந்த ஆவணமும் இணைக்க தேவையில்லை. வாக்காளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முகாம்களில் பங்கேற்க அனைத்து வாக்காளர்களையும் அவர் அன்புடன் அழைத்துள்ளார்.





















