37 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... டோல்கேட்டில் நடந்த அதிரடி
உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 37 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.37.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பணம் மற்றும் மதிப்புள்ள பொருட்கள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, சூலூர் அருகே சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்தை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
உரிய ஆவணம் இன்றி தங்கம் பறிமுதல்
பேருந்தில் பயணம் செய்தவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது, கோவை சித்தி விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த அனுப் ராணா என்பவரிடம் சந்தேகத்திற்கிடமாக ஒரு பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 255 கிராம் எடையுடைய தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.
அதிகாரிகள் அந்த நபரிடம் நகைகளுக்கான உரிய ஆவணங்கள், ரசீது அல்லது வாங்கிய விவரம் குறித்து கேட்டபோது, அவர் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க முடியவில்லை. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளின்படி சுமார் ரூ.37 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பு கருதி அரசு கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுத்து நகைகள் திருப்பி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் காலத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















