Local Body Election | 'கோவையை கலவர பூமியாக மாற்ற திமுக முயற்சிக்கிறது’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
”வெளியூர் ரவுடிகளை திமுக கோவையில் களமிறக்கியுள்ளது. இதற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரவுடிகளை வார்டு வாரியாக போட்டு மக்களையும், மாற்றுக் கட்சியினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்”
கோவையில் அதிமுகவினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போடுவதாக கூறி, ராமநாதபுரம் காவல் நிலையத்தை 100 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலின் பேரில், அதிமுகவினர் மீது காவல் துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கோவையில் கரூர் மற்றும் வெளி மாநில ரவுடிகள் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்துவதோடு, வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் அதிமுகவினர் புகார் அளித்ததால் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கூறிய அவர்கள், உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது திமுக கோவையை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கிறது. சென்னை, கரூர் உள்ளிட்ட வெளியூர் ரவுடிகளை திமுக கோவையில் களமிறக்கியுள்ளது. இதற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரவுடிகளை வார்டு வாரியாக போட்டு மக்களையும், மாற்றுக் கட்சியினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி 150 கண்டெய்னர்களில் பரிசுப் பொருட்களை கொண்டு வந்து, வாக்காளர்களுக்கு வெளிப்படையாக கொடுத்து வருகின்றனர். இது போல ஒரு தேர்தலை பார்த்ததில்லை. கோவை மக்கள் அமைதியானவர்கள். அமைதியை கெடுக்கும் விதமாக வெளியூர் ரவுடிகளால் மோசமான சூழலை உருவாக்கி வருகின்றனர். திமுக அரசு தோல்வி பயத்தால் மோசமான செயலில் ஈடுபட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு காவல் துறையினர் உடந்தையாக உள்ளனர். காவல் துறையினர் திமுகவினர் போல மாறி, திமுகவினர் உடன் இணைந்து பணம் கொடுத்து வருகின்றனர். தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.
வெளியூர் ரவுடிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்த அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரத்தை கைது செய்து இரவு முழுவதும் சித்ரவதை செய்துள்ளனர். பூத் சிலிப்பை அதிகாரிகள் கொடுக்காமல், திமுகவினர் வழங்கி வருகின்றனர். திமுக அரசு 9 மாதங்களாக துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. அதிமுக திட்டங்களை தான் திமுக செய்து வருகிறது. மக்களை துன்புறுத்துவதை வேடிக்கை பார்க்க மாட்டோம். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ஆளுநரிடம் புகார் அளிப்போம்” என அவர் தெரிவித்தார்.