S.P. Velumani: 'நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவா?’ - கொந்தளித்த எஸ்.பி. வேலுமணி
"ஏக்நாத் ஷிண்டே அவரது கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். இதுபோல் சில்மிஷம் செய்து எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அதிமுகவில் இருந்து என்னை மட்டுமல்ல. யாரையும் பிரிக்க முடியாது”
அதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழாவை, அக்கட்சி தொண்டர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் அதிமுகவினர் அவிநாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைத்த எஸ்.பி. வேலுமணி, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக பேரியக்கம் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் 52 வது ஆண்டு துவக்க விழா சிறப்பான முறையில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
இரண்டரை ஆண்டு காலமாக திமுக அரசு எந்த திட்டமும் கோவை மாவட்டத்திற்கு தரவில்லை. எந்தவொரு திட்டமும் புதிதாக வரவில்லை. கோவையில் சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுகிறது. பல சாலைகள் போடப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் கோவையில் 500 சாலை திட்ட ஒப்பந்தங்களை இரத்து செய்தார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை. சாலைகளும் சரியில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் வரும்” எனத் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே எஸ்.பி. வேலுமணி என பகிரப்பட்டு வரும் கருத்து தொடர்பான கேள்விக்கு, ”இதற்கு நான் ஏற்கனவே பதில் சொல்லியுள்ளேன். இந்த பிரச்சனையை யார் கிளப்புகிறார்கள்? எங்கிருந்து வருகிறது? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இதுபோல திமுக ஐ.டி. விங்கினர் எதாவது செய்து குளிர் காய நினைக்கிறார்கள். ஏக்நாத் ஷிண்டே அவரது கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் முழுமையாக நிற்கிறோம். நான் அதிமுககாரன். என் அப்பா காலத்தில் இருந்து என் குடும்பமே அதிமுக குடும்பம் தான். என்ன குழப்பம் செய்தாலும் எதுவும் நடக்காது. எடப்பாடி தலைமையில் வீறுநடை போடுவோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும். அத்தனை மக்களும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என நினைக்கின்றனர். என் மீது முதலமைச்சருக்கும், திமுகவிற்கும் கோபம் ஏன்? எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வந்து விட்டார். திமுக கூட்டணி கட்சிகள் வெளியே வருகிறது. சிறுபான்மை மக்களின் காவலராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதனால் பாஜகவுடன் முன்னால் சேருவோம், பின்னால் சேருவோம் என சொல்கின்றனர். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை?
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெளிவான சொல்லி விட்டார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதனை இவர்களால் தாங்க முடியவில்லை. அதனால் இப்படி குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். திமுக கூட்டணி எம்.பி.க்கள் எதுவும் செய்யவில்லை. இதுபோல் சில்மிஷம் செய்து எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இபிஎஸ் துரோகம், எதிரிகள் முறியடித்து வந்துள்ளார். அதிமுகவில் இருந்து என்னை மட்டுமல்ல. யாரையும் பிரிக்க முடியாது” எனப் பதிலளித்தார்.