’மழை போன்ற இடையூறுகளால் டி 23 புலியை பிடிப்பதில் சிக்கல்’ – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
புலியைக் பிடிக்கும் போது மழை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் வருவதால், சற்று சிரமமாக உள்ளது. அறிவியல் பூர்வமாக தொழில் நுட்ப ரீதியாகவும், உயர் ரக கேமராக்கள் ட்ரோன்கள் மூலமாகவும் புலி தேடப்பட்டு வருகிறது.

கோவை வடகோவை பகுதியில் உள்ள தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் 67ஆவது வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வன உயிரின வார விழாவை ஒட்டி, கோவை வனக்கோட்டத்திற்கான யானை உருவம் பொருந்திய நிரந்தர புதிய லோகோவை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் வெளியிட்டார். மாநில அளவிலான ஓவியம் வரைதல், சின்னம் வடிவமைக்கும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், ”அதிமுக ஆட்சியில் வன விலங்குகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகை கொடுக்கவில்லை. 6 கோடி வரையிலான தொகையை மக்களுக்கு கொடுக்காத அரசாக அதிமுக அரசு இருந்தது. திமுக ஆட்சியில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக் கோரி முதலமைச்சர் அரசாணை வெளியிட்டுள்ளார், வன விலங்குகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படமால் இருக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளைக் எடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமசந்திரன், ”மண் சார்ந்த மரங்களக் மாவட்டம் தோறும் வளர்க்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. அயல் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தைலம் உள்ளிட்ட மரங்களைக் அகற்ற இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் டி 23 புலியை பிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கேரளாவிலிருந்து வனத்துறையினரும் வந்துள்ளனர். புலியைக் பிடிக்கும் போது மழை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் வருவதால், சற்று சிரமமாக உள்ளது. டி 23 புலி ஆரம்பத்தில் சுற்றி திரிந்த இடமான தேவன் எஸ்டேட் பகுதியிலும் 30 வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர். அறிவியல் பூர்வமாக தொழில் நுட்ப ரீதியாகவும், உயர் ரக கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும் புலி தேடப்பட்டு வருகிறது. புலி வேறு இடத்திற்க்கு சென்று விட்டதா என்பதையும் தொடர்ந்து கண்கானிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கப்படுகிறது. கூடிய விரைவில் டி23 புலியை பிடிபடும். சிங்காரா காட்டு பகுதியில் வேறு புலிகளும் இருப்பதால் அதையும் கவனத்தில் கொண்டு தான் இந்த புலியை பிடிக்க திட்டமிட்டுள்ளோம். வனத்தையொட்டிய அரசு தரிசு நிலங்களில், அந்த பகுதியொட்டி வசிக்கின்ற மக்களின் கால்நடைகளை மேய்ப்பதற்காக புற்கள் நடப்பட்டு கால்நடைகள் வனப்பகுதிக்குள் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது” என அவர் தெரிவித்தார்.





















