’’மதுபானம் கலந்த ஐஸ்கிரீமை மாணவர்கள் அதிகம் சாப்பிட்டுள்ளனர்’’-உணவுபாதுகாப்பு அதிகாரி பேட்டி
’’உணவு தயார் செய்யும் இடத்தில் 2 பாட்டில் விஸ்கி, பிராந்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பணியில் இருந்தவர்களிடம் கேட்ட போது கலப்பதற்காக வைத்திருப்பதாக தெரிவித்தனர்’’
கோவை அவினாசி சாலையில் லட்சுமி மில்ஸ் பகுதியில் தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. அங்கு ரோலிங் டப் கபே என்ற ஐஸ்கிரீம் கடை இயங்கி வந்தது. இந்தக் கடையில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பதின் பருவ வயதினர் அதிகளவில் இந்த கடைக்கு வருவதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஐஸ்கிரீம்களில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார் குறித்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று அந்த கடையில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் உணவு தயார் செய்யும் இடத்தில் 2 மது பாட்டில்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த ஆய்வின் போது கடையில் உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை என்பதும், உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டதுடன் உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமாக இல்லை என்பதும் தெரியவந்தது. அதேபோல உணவு உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம், தலைஉறை மற்றும் கையுறை அணிந்து பணி புரியாததுடன், உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் கடையின் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கும் அதிரடியாக சீல் வைத்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இந்த கடையில் ஐஸ்கீரிமில் மது கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவு பேரில், கடையில் ஆய்வு செய்தோம். உணவு தயார் செய்யும் இடத்தில் 2 பாட்டில் விஸ்கி, பிராந்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்ட போது கலப்பதற்காக வைத்திருப்பதாகவும், தொடர்ச்சியாக இதுபோல செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அதன் மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிறைய வாங்கி சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து இவற்றை உண்டால் ஆடிட் ஆக வாய்ப்புள்ளது” என அவர் தெரிவித்தார்.