வால்பாறை : நகராட்சி முன்னாள் ஆணையாளர் பவுன்ராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு..
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த உள்ளாட்சி துறை அதிகாரிகளில் பவுன்ராஜ் முக்கியமானவர் என கருதப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையளராக இருந்தவர் பவுன்ராஜ். இவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி நகராட்சி பணத்தை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. வால்பாறை நகராட்சியில் கடந்த சட்டமன்ற தேர்தல் அறவிக்கப்பட்ட பின்பு சட்ட விரோதமாக ஒப்பந்ததாரர்களுக்கு கான்டிராக்ட் வழங்கி கோடிக்கணக்கில் பணம் விடுவித்ததாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜ், திருப்பூர் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சரவணகுமாருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் முன்னிலையில் கோவை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்த சோதனையில் பவுன்ராஜ் அரசு விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு இருந்ததும், ஓராண்டு காலத்தில் மட்டும் 1256 காசோலைகள் மூலம் 15.62 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை முறைகேடாக விடுவித்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நகராட்சிகளின் திருப்பூர் மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையாளர் பொறுப்பில் இருந்து பவுன்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மோசடி தொடர்பாக பவுன்ராஜ் மீது கோவை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்தனர். 15 கோடி மோசடி ஒரு வழக்காகவும், 35 லட்சம் மோசடி செய்ததாக ஒரு வழக்காகவும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 15 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கை கோவை மாவட்ட குற்றப் பிரிவில் இருந்து, கோவை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றி டிஜிபி அலுவலகம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், கோவை லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் வால்பாறை நகராட்சியின் முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் மீது புதியதாக மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நகராட்சி ஆணையருக்கு இருக்கும் அதிகாரத்தைத் தாண்டி, முறைகேடாக ஓப்பந்ததார்களுக்கு பணம் வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த உள்ளாட்சித்துறை அதிகாரிகளில் பவுன்ராஜ் முக்கியமானவர் என கருதப்படும் நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்கள் மீது இலஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.