Watch Video: காட்டு யானைகளுக்கே கொம்பன்... ஓய்வு பெற்றது கலீல் கும்கி யானை - சல்யூட் அடித்த வனத்துறை
வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனப்பணியாளர்கள், ஓய்வு பெற்ற கலீம் கும்கி யானைக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். அப்போது கலீம் யானை தும்பிக்கையை தூக்கி பிளிறியது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம்.
இதன் காரணமாக பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு கிராமப்பகுதிக்குள் நுழைந்து தொடர்ச்சியாக சேதங்களை ஏற்படுத்தும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், பிடித்து சென்று வேறு பகுதியில் விடவும் கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கும்கி யானைகள் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோழிகமுத்தி யானைகள் முகாம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கலீல் கும்கி யானை:
கோழிகமுத்தி யானைகள் முகாமில் 26 யானைகள் வனத்துறையினரால் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் கலீம் என்ற கும்கி யானை காட்டு யானைகளை விரட்டுவதிலும், பிடிப்பதிலும் தேர்ச்சி பெற்றது. ஆஜானுபாகுவான தோற்றமும், நீண்ட தந்தங்களும் கொண்ட இந்த கும்கி யானையைப் பார்த்தால், காட்டு யானைகள் அச்சம் கொள்ளும். அதன் காரணமாக கலீம் கும்கி யானை தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் சென்று காட்டு யானைகளை விரட்டியுள்ளது.
சத்தியமங்கலம் அருகேயுள்ள ஹாசனூர் வனப்பகுதியில் 7 வயது குட்டியாக இருந்த போது பிடித்து வரப்பட்ட, ஆண் யானைக்கு கலீம் என பெயர் சூட்டி டாப்சிலிப் யானைகள் முகாமில் கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு பயிற்சி அளித்த பழனிச்சாமி என்பவர் அந்த யானைக்கு பாகனாக நியமிக்கப்பட்டர். பின்னர் அவரது மருமகன் மணி பாகனாக நியமிக்கப்பட்டார். ஊருக்குள் புகுந்து பயிர் சேதம் ஏற்படுத்தும் காட்டு யானைகளை பிடிக்க கலீம் யானை பயன்படுத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளுக்கு சென்று காட்டு யானைகளை விரட்டுதல், பிடித்தல் உள்ளிட்ட 99 ஆப்ரேசன்களை வெற்றிகரமாக கலீம் யானை செய்துள்ளது. கலீம் யானையால் பிடித்து வரப்பட்ட சின்னத்தம்பி, அரிசி ராஜா உள்ளிட்ட பல யானைகள் கோழிகமுத்தி முகாமில் கும்கி யானைகளாக உள்ளன.
Our eyes are wet and hearts are full with gratitude as Kaleem the iconic Kumki elephant of the Kozhiamuttthi elephant camp in Tamil Nadu retired today at the age of 60. Involved in 99 rescue operations he is a legend. He received a guard of honour from #TNForest #Kaleem pic.twitter.com/bA1lUOQmTw
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 7, 2023">
ஓய்வு:
இந்த நிலையில் 60 வயதை எட்டிய கலீம் கும்கி யானைக்கு, வனத்துறையினர் இன்று முதல் ஓய்வு அளித்துள்ளனர். கோழிகமுத்தி யானைகள் முகாமில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனப்பணியாளர்கள், ஓய்வு பெற்ற கலீம் கும்கி யானைக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது கலீம் யானை தும்பிக்கையை தூக்கி பிளிறியது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள வனத்துறை இணைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, “எங்களது கண்கள் ஈரமாகவும், இதயம் நன்றிகளாலும் நிறைய கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள கலீம் யானைக்கு 60 வயதான நிலையில், இன்று முதல் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 99 ஆப்ரேசன்களில் அந்த யானை பங்கேற்றுள்ளது. அந்த யானைக்கு வனத்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்