கோவையில் நள்ளிரவில் கொட்டிய மழை; சாலைகளில் தேங்கிய வெள்ள நீரால் போக்குவரத்து பாதிப்பு
இரயில்வே பாலத்தின் அடியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
![கோவையில் நள்ளிரவில் கொட்டிய மழை; சாலைகளில் தேங்கிய வெள்ள நீரால் போக்குவரத்து பாதிப்பு Due to heavy rains in Coimbatore, roads are flooded and traffic is affected TNN கோவையில் நள்ளிரவில் கொட்டிய மழை; சாலைகளில் தேங்கிய வெள்ள நீரால் போக்குவரத்து பாதிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/27/eba734b0186ba5ffb3959c3c7e5258511661570198685188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாநகரப் பகுதிகளில் நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக இரயில்வே மேம்பாலங்களின் அடியில் தேங்கிய வெள்ள நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை மாநகர பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகரப் பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால், கணபதி, பீளமேடு, லட்சுமி மில், ராமநாதபுரம், சிங்காநல்லூர், வெள்ளலூர், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.நேற்று வால்பாறை பிஏபி பகுதியில் 7.3 செ.மீ. மழையும், வால்பாறை தாலுக்காவில் 6.9 செ.மீ. மழையும், வேளாண் பல்கலைக்கழக பகுதியில் 5.9 செ.மீ. மழையும், சின்னக்கல்லார் பகுதியில் 5.5 செ.மீ. மழையும் பதிவானது.
இதனால் தாழ்வான சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில், மழைக் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் இரயில்வே மேம்பாலத்தின் அடியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதேபோல உப்பிலிபாளையம் அவிநாசி சாலை மேம்பாலத்தில் இரயில்வே பாலத்தின் அடியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாநகராட்சி ஊழியர்கள் பாலத்தின் அடியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், நேரில் ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
கோவையில் கனமழை பெய்யும் ஒவ்வொரு முறையும் லங்கா கார்னர் மற்றும் உப்பிலிபாளையம் அவிநாசி சாலை இரயில்வே பாலங்களில் அடியில் வெள்ள நீர் தேங்கி நிற்பதும், போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணும் வகையில் வெள்ளநீர் வெளியேற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இன்றும் கோவையில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)