Udaya nagar: அண்ணா நகர்... கலைஞர் நகர்... வரிசையில் உதயமானது உதயா நகர்!
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயர் கோவை மாவட்டம் தோலம்பாளையம் ஊராட்சியில் சீங்குளி என்ற பகுதிக்கு சூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் பிரமுகர்கள் வரையிலானோர் பெயர்களை சுமந்தபடி பல்வேறு வீதிகளும், தெருக்களும் உள்ளன. அதிலும் பெரியார் நகர், காமராசர் நகர், அண்ணா நகர், ஜீவா நகர், எம்.ஜி. ஆர் நகர், கலைஞர் நகர், ஜெ.ஜெ. நகர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை கொண்ட பகுதிகள் அதிகளவில் உள்ளன. அந்த வரிசையில் புதிதாக உதயமாகியுள்ளது உதயா நகர். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயர் கோவை மாவட்டம் தோலம்பாளையம் ஊராட்சியில் சீங்குளி என்ற பகுதிக்கு சூட்டப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி தோலம்பாளையம் ஊராட்சி. காரமடையில் இருந்து ஆனைக்கட்டி பகுதி நோக்கி செல்லும் மலைப்பாதையில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சீங்குளி என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தான் உதயநிதி ஸ்டாலின் பெயர் சூட்டப்பட்ட உதயா நகர் அண்மையில் உதயமாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படங்களும் உதயா நகர் பெயர் பலகையில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் பெயரை தாங்கியுள்ள முதல் பகுதி இது தான் என அக்கிராமத்தினர் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது, திமுகவை சேர்ந்த தோலம்பாளையம் ஊராட்சித் தலைவர் இப்பகுதிக்கு உதயா நகர் என பெயர் சூட்டியிருப்பதாக தெரிவித்தனர்.
உதயா நகர் பெயர் சூட்டல் குறித்து தோலம்பாளையம் ஊராட்சித் தலைவர் ஜெயா செந்திலிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அப்போது பேசிய அவர், ”முதல் முறையாக தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். கலைஞர் ஆட்சி காலத்தில் இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. தோலம்பாளையத்தில் ஆறாவது மற்றும் ஏழாவது வார்டை சேர்ந்த சீங்குளி பகுதிக்கு உதயா நகர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் அன்று உதயா நகர் என பெயர் சூட்டி, பெயர் பலகை திறக்கப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம். பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினோம்” என அவர் தெரிவித்தார்.
முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென திமுக அமைச்சர்கள் வலியுறுத்தி வருவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் திமுகவினர் அவரது பெயரை ஒரு பகுதிக்கு சூட்டியுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் பெயரை ஒரு பகுதிக்கு சூட்டியிருப்பது கோவை மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.