(Source: ECI/ABP News/ABP Majha)
கொம்பனை விரட்ட கும்கிகளுக்கு கொரோனா பரிசோதனை!
28 கும்கி யானைகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யானைகளின் சளி மாதிரிகளை உத்திரப் பிரதேசத்திலுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து, முதுமலையில் உள்ள 28 கும்கி யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் பாதித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாதம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. தொடர்ந்து, பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உயிரியல் பூங்காவில் உள்ள 5 சிங்கங்களுக்கு கடந்த மே 26 ஆம் தேதி உடல் நலக் குறைபாடுகள் தென்பட்டதை அதிகாரிகள் கவனித்தனர். இதனையடுத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் அழைக்கப்பட்டு 11 சிங்கங்களின் சளி மாதிரிகளை சேகரித்து சோதனை செய்ததனர். இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கடந்த 3ஆம் தேதி மாலை 9 வயது நீலா என்கிற பெண் சிங்கம் உயிரிழந்தது. மற்ற 8 சிங்கங்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள அனைத்து விலங்குகள் மற்றும் வளர்ப்பு யானை முகாம்களில் உள்ள கும்கி யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார். விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தால், விலங்குகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு கும்கி யானைகள் முகாம் மற்றும் கோவை மாவட்டம் டாப்சிலிப் கும்கி யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவெடுத்தனர்.
இதனிடையே யானைகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதை தொடர்ந்து, முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. யானைகளை ஒன்றாக நிறுத்துவது தவிர்க்கப்பட்டு, ஒவ்வொரு யானைக்கும் தனித்தனியாக உணவு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், யானைப் பாகன்கள், உதவியாளர்கள், முகாமில் பணி புரியும் வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், மருத்துவப் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாம்களில் உள்ள 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த 28 கும்கி யானைகளுக்கும் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யானைகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. யானைகளின் சளி மாதிரிகளை உத்தரப் பிரதேசத்திலுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதேபோல டாப்சிலிப் யானைகள் முகாமில் உள்ள கும்கி யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த மருத்துவப் பரிசோதனையில் தான் யானைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும் எனவும், ஒருவேளை யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால் தனிமைப்படுத்தி தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். கொம்பன் என்கிற கொரோனாவிலிருந்து கும்கிகளை காப்பாற்றவே இந்த முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.