கோவை : 1089 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று ; 30 பேர் உயிரிழப்பு..!
தமிழ்நாட்டில் இன்று கோவையில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. அதேசமயம் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் சென்னையை விட கோவையில் அதிகமாக பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அதே சமயம் கோவையில் மே மாதத்தில் ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், ஜீன் மாதத்தில் இறங்குமுகத்தில் உள்ளது. கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் தினசரி கொரொனா பாதிப்புகள் 1100-க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று 1089 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று 1227 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்றைய தினத்தை விட இன்று 138 பேருக்கு குறைவாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 10 ஆயிரத்து 570-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 11 ஆயிரத்து 644 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.
இன்று கொரோனா தொற்றில் இருந்து 2237 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 75 பேராக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா தொற்றால் இன்று 30 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1853 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
கோவை மற்றும் ஈரோடு ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் ஈரோட்டிலும் தினசரி பாதிப்புகள் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும் தினசரி கொரொனா பாதிப்பில் ஈரோடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இன்றும் சென்னையை விட ஈரோட்டில் அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்று 964 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். 1266 பேர் குணமடைந்துள்ள நிலையில், 9365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 81 ஆயிரத்து 891 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகள் 524 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 19 பேர் உயிரிழந்துள்ளனர். 2591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 77747 ஆகவும், குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 68153 ஆகவும், மொத்த உயிரிழப்பு 684 ஆகவும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 181 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 443 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 2437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 26843 ஆகவும், குணமடைந்தவர்கள் 24264 ஆகவும், உயிரிழப்புகள் 142 ஆகவும் உள்ளது.